திமுக கூட்டணியில் சேர்ந்ததால் தேமுதிகவும் ஒரு தொகுதி மதுரையில் கேட்பதால், ஏற்கெனவே திட்டமிட்டு தொகுதிகளைக் கேட்டு காய் நகர்த்தி வந்த மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு விரும்பிய தொகுதிகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக, கடந்த முறை மதுரை கிழக்கு, மத்தி, வடக்கு, சோழவந்தான் மற்றும் தெற்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், தெற்கில் மதிமுகவின் பூமிநாதன் வெற்றிபெற்றார். ஆனால், அதிமுக தனிப்பெரும் கட்சியாக மாவட்டத்தில் 5 தொகுதிகளைக் கைப்பற்றியது. இவ்வளவுக்கும் அந்தக் கட்சி தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அப்படியிருந்தும் எதிர்ப்பு அலையைத் தாண்டி மதுரையில் இந்த வெற்றியை அக்கட்சி பெற்றது.
மதுரை அதிமுகவுக்குச் செல்வாக்கான மாவட்டம் என்பதால் இந்த முறையும் திமுகவுக்கு அக்கட்சி கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக, திமுக மற்றும் அதிமுகவுடன் மாறிமாறி கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியநிலையில், அந்த கட்சியின் விருப்பத் தொகுதியாக மதுரையில் ஒன்று இருந்துள்ளதாக பேச்சுவார்த்தை நடத்திய நிர்வாகிகள் கூறினர்.
அந்த அடிப்டையில் தற்போது திமுக கூட்டணியில் சேர்ந்துள்ள தேமுதிக, விரும்பிக் கேட்பதில் திருப்பரங்குன்றம், மதுரை மத்தி ஆகிய தொகுதிகள் உள்ளன. மதுரை மத்தி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி என்பதால் திமுக அதை உறுதியாக விட்டுக்கொடுக்காது. அதற்கு அடுத்த தேர்வாக தேமுதிகவுக்கு திருப்பரங்குன்றம் உள்ளது.
கடந்த முறை திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் போட்டியிட்டு அதிமுகவிடம் தோல்வியடைந்தது. இந்தமுறை மார்க்சிஸ்ட், மதுரை மேற்கு தொகுதியைக் கேட்கிறது. அதனால், அவர்கள் திருப்பரங்குன்றத்தை தேமுதிகவுக்கு விட்டுக்கொடுத்து மேற்கு அல்லது தெற்கு தொகுதிகளில் ஒன்றைக் கேட்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆனால், தெற்கு மதிமுக எம்எல்ஏ பூமிநாதனுக்காக அக்கட்சி கேட்டுள்ளது. தற்போதைய எம்எல்ஏவாக இருப்பதால் இந்தத் தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சிக்கு விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை. தேமுதிகவுக்கு திருப்பரங்குன்றம் ஒதுக்கும் பட்சத்தில் திமுக மேலிடம், மதுரை மேற்கை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கவும் வாய்ப்புள்ளது.
அதேபோல், காங்கிரஸ், கவுன்சிலர் கார்த்திகேயனுக்காக மதுரை வடக்கைக் கேட்கிறது. ஆனால், மாநகர திமுக மாவட்டச் செயலாளர் தளபதி போட்டியிடுவதால் அந்தத் தொகுதியை திமுக விட்டுக்கொடுக்க வாய்ப்பில்லை. அப்படி விட்டுக்கொடுத்தால் தளபதி, மதுரை மேற்கில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறையைப்போல், மேலூர் ஒதுக்கும்பட்சத்தில் தளபதி மீண்டும் மதுரை வடக்கில் போட்டியிடுவார். ஆளும்கட்சி நடத்திய ரகசிய ஆய்வில் மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்டங்களில் நீடிக்கும் உட்கட்சிப் பூசல், மகளிர் உரிமைத்தொகை அறிவித்தும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை எனக் கூறப்படுகிறது. மதுரை கிழக்கைத் தவிர மற்ற தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை திமுகவால் உறுதி செய்ய முடியாததாலே, தேமுதிகவை அக்கட்சி, கூட்டணிக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

