மாகாண சபைகள் தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அது தொடர்பான விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் 12 உறுப்பினர்களை உள்ளடக்கிய விசேட செயற்குழு ஒன்றை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நியமித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற அமர்வின் போது சபாநாயகர் இந்த அறிவிப்பை சபைக்கு விடுத்தார்.
அவர் மேலும் அறிவித்ததாவது,
மாகாண சபைகள் தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அது தொடர்பான விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் அண்மையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் இணை உறுப்பினர்களாக ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி அமைச்சர்களான சுனில் வட்டகல,முனீர் முழப்பர், அருன் ஹேமசந்திரா,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் நிபுணராச்சி,சமன்மலி குணசிங்க,தர்மபிரிய விஜேசிங்க,சந்தன சூரியராச்சி ஆகியோரும், எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.
மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கலுக்கு தீர்வு காணும் பொருட்டு விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கு பாராளுமன்ற விசேட செயற்குழு ஒன்றை நியமிப்பதற்கான யோசனையை ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ 2026.01.06 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் ஒரு யோசனையை முன்வைத்தார்.
அந்த யோசனையில், 1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்தம் செய்து தற்போது வழக்கில் உள்ள 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு தேர்தல் முறைமைக்கமைய தொகுதி,எல்லை நிர்ணய முறைமை இதுவரையில் நிறைவுப்படுத்தாத காரணத்தால் சகல மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தற்போது இயங்குகிறது.
தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் சட்டத்தின் குறைகளை அவதானத்து அதற்குரிய திருத்தங்களை முன்வைக்க 2022 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட விசேட குழு 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு தேர்தல் முறைமைக்கு அமைய எல்லை நிர்ணயம் செய்து அதன் பின்னர் சட்ட வரைவை தயாரிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவரையில் விகிதாசார தேர்தல் முறைமையின் தேர்தலை நடத்தலாம் என்று யோசனை முன்வைக்கப்பட்டது.
17 உறுப்பினர்களை கொண்ட இந்த குழுவில் 8 பேர் மாத்திரம் கைச்சாத்திட்டு அறிக்கையை 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்வைத்தனர்.2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் மாகாண சபைத் தேர்தல் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுகிறது.
இந்த குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை சபாநாயகர் பெயர் குறிப்பிட வேண்டும். குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை 12 விஞ்சிதல் ஆகாது.எந்த நபரையும் குழுவுக்கு அழைக்கவும், ஆவணம் கோரவும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அமர்வு இல்லாத சந்தர்ப்பங்களிலும் கூட்டங்களை நடத்த முடியும்.விதப்புரைகள் மற்றும் யோசனை தொடர்பான முழுமையான அறிக்கை மூன்று மாத காலத்துக்குள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த யோசனையை அடிப்படையாகக் கொண்டு சபாநாயகர் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் விசேட செயற்குழுவை நியமித்துள்ளார். இந்த குழு இன்றிலிருந்து (நேற்று) மூன்று மாத காலத்துக்குள் விதப்புரை அறிக்கையை சபாநாயகருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

