பயங்கரவாத தடைச்சட்ட வரைபை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றது

334 0

“சர்வதேச சட்டங்களுக்கு அமைய திருத்தப்பட்ட இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்ட வரைபை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டு அதற்கு அங்கிகாரமளித்துள்ளது” என, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும், ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்றது. இதன்போதே, அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “பாதுகாப்பு அமைச்சரின் மேற்பார்வை மற்றும் ஏனைய அமைச்சர்களின் கருத்துகளை கவனத்திற் கொண்டு, திருத்தியமைக்கப்பட்ட இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக முன்மொழியப்பட்ட சட்டத்துக்கான கொள்கை மற்றும் சட்ட வரைவு, அமைச்சரவையில் பிரதமரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைச்சரவை அனுமதிப்பதற்கும், குறித்த கொள்கை மற்றும் சட்ட வரைபின் அடிப்படையில் இலங்கை பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக முன்மொழியப்பட்ட சட்டத்தினை வரைவதற்கு சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்தது” என்றார்.

“ஜீ.எஸ்.பி வரிசலுகையை இலங்கைக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நாளை (இன்று) ஐராப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. அதற்காகவா அவசரமாக இந்தச் சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவை நேற்று ( செவ்வாய்க்கிழமை) அனுமதியளித்துள்ளது?” என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித, “அதற்கும் இதற்கும் தொடர்ப்பு இல்லை இங்கே அமைச்சரவை கூடுவது அவர்களுக்கு தெரிந்திருக்கபோவதில்லை. இது வழமையான முறையில் அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் உள்ள பயங்கரவாதம் தொடர்பான சட்டம் மாற்றப்பட்டு புதியச் சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

உள்நாட்டு பயங்கரவாதம் மாத்திரமின்றி சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளையும் கவனத்திற் கொண்டு இந்த சட்டமூலம் வரையப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளில் காணப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்களை உள்வாங்கி இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சொல்வது அனைத்தையும் எந்தவொரு நாடுகளும் முழுமையாக பின்பற்றுவதில்லை. அதில் தமது நாட்டுக்கு பொறுத்தமானவற்றை மாத்திரம் அவை உள்வாங்கிக்கொள்கின்றன.

இந்த சட்டம் எமது நாட்டின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ளது இதற்கும் ஜீ.எஸ்.பி வரிசலுகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜீ.எஸ்.பி வரிசலுகையை இலங்கைக்கு வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் முனு்னதாக தீர்மானம் எடுத்துவிட்டுதான் தற்போது விவாதத்தை நடத்துகின்றது.

அதனால் பாதிப்புகள் இல்லை. நமது நாட்டை போல ஒரு சில உறுப்பினர்களை கொண்டு திடீரென தீர்மானங்களை மாற்றும் நாடாளுமன்றம் அல்ல” என்றார்.