தன்னுடைய பேத்தியின் முதலாவது பிறந்த தினத்துக்கு, சுமார் 40 மில்லியன் ரூபாய் (4 கோடி) பெறுமதியான பென்ஸ் காரொன்றை, முன்னாள் இராஜாங்க அமைச்சரொருவர் பரிசளித்துள்ளமை, சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக இருந்து, தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்த பிரியங்கர ஜயரத்னவே, தன்னுடைய பேத்தியான ஜவோனியாவுக்கு அந்தக் காரை பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த விவகாரம், சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அந்த ஊடகங்களுக்குப் பதிலளித்துள்ள, பிரியங்கர ஜயரத்ன, “பரிசளிக்கப்பட்டதாகக் கூறப்படும், அந்த வாகனம் என்னுடையது அல்ல. அது, எனது மருமகனுடையது. ஒருவருடத்துக்கு முன்னரே, அந்த வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கு விண்ணப்பம் செய்யப்பட்டது.
அதனையும் என்னுடைய மருமகனே செய்திருந்தார். என்னுடைய, பேத்தியின் முதலாவது பிறந்த தினத்துக்கு, பென்ஸ் காரை பரிசளித்துள்ளதாக கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை. இது, என்னுடைய அரசியலுக்கு சேறுபூசும் நடவடிக்கையாகும்.
ஒருவயதான குழந்தைக்கு, எவராவது பென்ஸ்காரைப் பரிசாக வழங்குவார்களா?, விளையாட்டுக் காரைத்தான் பரிசாக வழங்குவார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். “பென்ஸ் கார் வாங்குமளவுக்கு என்னிடம் பணமில்லை. நானே, பழைய ஜீப் வண்டியில்தான் பயணிக்கிறேன்” என்றும் அவர் மேலும் கூறினார்.
“என்னுடைய பேத்தியின் பிறந்தநாளுக்கு, சுமார் 18ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஒரு ஜோடித் தோடுகளையே பரிசாக அளித்தேன்” என்றார். எனினும், அந்த பென்ஸ் காரின் முன்பக்கம், இலக்கத்தகடு பொருத்தவேண்டிய இடத்தில், ஹப்பி பேர்த்டே ஜவோனியா (ஜவோனியாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்) என, ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

