அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் நேற்று அனுஸ்டிக்கப்பட்டபோது, அன்னை பூபதியை தேசப்பற்றாளராக அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் எற்பாட்டில் கல்லடியில் உள்ள அன்னை பூபதியின் கல்லறையில் நினைவு தின நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் காந்தி சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.செல்வேந்திரன் உட்பட சிவில் செயற்பாட்டாளர்கள், அன்னை பூபதியின் மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அன்னையின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகச்சுடர் ஏற்பட்டது.
1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி இந்திய இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த அன்னை பூபதி ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தில் உயிரிழந்தார்.
விடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் அன்னை பூபதி நினைவுகூரப்பட்டுவந்த நிலையில் யுத்தம் முடிவுக்க பின்னர் அன்னை பூபதியின் நினைவு தினத்தை நடாத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்ட நிலையில் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுச்சியுடன் அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

