நகர அபிவிருத்தி அதிகார சபை காணிகளில் குப்பை சேகரிக்க தடை

347 0

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடங்களில் குப்பைகளை சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளில் குப்பைகளை குவிக்க தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபைகள், நகர சபைகள் அல்லது ஏதேனும் அரசாங்க நிறுவனங்களுக்கு குப்பை சேகரிக்க காணி அவசியம் எனில், அவர்கள் வசமுள்ள ஒதுக்கீடுகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்தமையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சம்பிக்க ரணவக்க தனது கவலைகளை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குப்பை மேடு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை உரிய முறையில் புனரமைப்புச் செய்வது குறித்து இலங்கை இராணுவத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி செயற்பட, நகர அபிவிருத்தி அதிகார சபை முன்நிற்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுஇவ்வாறு இருக்க, இந்த சம்பவத்தால் 69 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் அரசாங்கத்தால் நிதி ஒதுக்கப்படுமாயின் வீடுகளை பெற்றுக் கொடுக்க விரைந்து செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.