மீத்தொட்டமுல்ல அனர்த்தம்; அனர்த்த முகாமைத்துவ அமைச்சரின் விளக்கம்

308 0

மீத்தொட்டமுல்லையின் தற்போதைய நிலமை சம்பந்தமாக கண்காணித்து அது தொடர்பில் சே்சுவார்த்தை நடத்தி உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், தேவையான உணவு பானங்களை அரசாங்கம் மற்றும் உதவி வழங்குவோர்களிடமிருந்து பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதாகவும் அமைச்சர் அத தெரணவிடம் கூறினார்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், ஜனாதிபதியும் இது சம்பந்தமாக அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் கூறினார்.

இடம்பெயர்ந்தவர்கள் சுமார் 80 பேர் வரை இருப்பதாகவும், அது 200 பேர் வரை அதிகரிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும், எத்தனை பேராக இருந்தாலும் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

இந்த குப்பை மேடு சம்பந்தமாக நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த போதிலும், அதற்கு முறைாயன தீர்வொன்றின் தேவையுள்ளது என்று கூறினார்.

சுகாதாரமான முறையில் குப்பைகளை கொட்டும் இடம் ஒன்றை அமைப்பது இதற்கான தீர்வாகும் என்றும், கொரிய நாட்டின் உதவியுடன் தொம்பே பிரதேசத்தில் இதுபோன்ற ஒரு இடம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும் நாடு பூராகவும் இது போன்ற 05 குப்பை கொட்டும் இடங்களை அமைப்பதற்கு முன்னர் பேசப்பட்டதாகவும், அது ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தனக்கு தெரியாது என்றும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

அதேபோன்று மற்றொரு தீர்வாக குப்பைகளுக்கு தீ வைக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கலாம் என்றும், இதற்கு பாரிய செலவு ஏற்படும் என்பதால் மக்களிடமிருந்து சிறு தொகை பணம் அறவிட வேண்டும் என்றும் கூறிய அமைச்சர், இத் திட்டத்தை தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.