ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானம் அல்ல.
அது அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் தமக்கு சாதகமான ஒரு அரசாங்கத்தை இலங்கையில் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான தீர்மானமேயாகும்.
இந்நிலையில் தமிழ் மக்களுடைய தலமைகள் உறுதியாக இருந்திருந்தால் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை போட்டிருக்க முடியும்.
ஆனால் தமிழ் தலமைகள் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்கே முயற்சித்திருக்கின்றது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரும், தமிழ் தலமைகளின் செயற்பாடும் என்ற பொருளில் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எதிர்கட்சி தலைவரின் பணியாகும்.
ஆனால் சம்மந்தன் என்ன செய்தார். தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று எதிர்கட்சி தலைவராக பதவிக்கு வந்தவர் அதே மக்களுக்கு நடந்த அழிவுகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பொறுப்புகூறல் மற்றும் நீதி கிடைப்பதைத் தடுத்து அரசாங்கத்தை பாதுகாத்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு 2 தடவைகள் எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்கப்பெற்றது.
இரு தடவையும் வாய்ப்புக்கள் கிடைத்தும் அந்த வாய்புக்களை பயன்படுத்தாமல் மக்களிடம் பெற்ற ஆணைக்கு எதிராகவே இரு எதிர்கட்சித் தலைவர்களும் செயற்பட்டிருக்கின்றார்கள் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

