அம்பாறை பகுதியில் உணவு விஷமானமையினால் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அம்பாறை – தமன – வானேகமுவ பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவே இவ்வாறு விஷமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் இரண்டு பெண்களும், ஆண்ணொருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உணவு விஷமானமையினால் மேலும் 203 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களில் 120 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அம்பாறை, சம்மாந்துறை ஆகிய வைத்தியசாலைகளிலேயே பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை – இறகாமம் பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.ஹலீமா (45), மொஹமட் காசிம் (53) மற்றும் கலன்தர் மாரியன் (63) ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று நடாத்தப்படவுள்ளதுடன், அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். எவ்வாறாயினும், உணவு விஷமானமையினால் மேலும் 29 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக அம்பாறை வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

