ஜெனிவாவில் வழங்கப்பட்டது உத்தரவுகள் அல்ல பரிந்துரைகள் -அமைச்சர் மனோ

345 0

நாட்டில் தற்போது ஜெனிவா பற்றி அதிகம் பேசி வந்தாலும், அவை ஜெனிவாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உத்தரவுகள் அல்ல, பரிந்துரைகள் மாத்திரமே என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எவரும் உத்தரவுகளை வழங்குவதில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அம்பாறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் எமக்கு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை இருக்கின்றது. நாங்கள் பரிந்துரைகள் குறித்து கலந்துரையாடி முடிந்தவகையில் பரிந்துரைகளை நிறைவேற்றுவோம்.

இதற்காக யாரும் குழப்பமடையத் தேவையில்லை. அத்துடன் சர்வதேச தொடர்புகள் நாட்டுக்கு தேவையில்லை என்று எவரும் கூற முடியாது.இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜெனிவா கூட்டத் தொடர் முடிவடைந்தது.அதில் கலந்து கொண்ட சரத் வீரசேகர என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சென்றிருந்தார். அவர் எப்படி சென்றார்?. அவர் மகிந்த ராஜபக்ச அணியின் பிரதிநிதியாக அங்கு சென்றார். அங்கு சென்று என்ன செய்தார்?

பல்வேறு விடயங்களை பேசி விட்டு, ஆராய்ந்து பார்க்க இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் அதிகாரி ஒருவரை அனுப்புமாறு கோரிக்கை விடுத்தார்.வீரசேகர இங்கு வந்த என்ன செய்தார்?.

புலிகள் அமைப்பின் குற்றங்களை தேடுமாறு கூறினார். அது பிரச்சினையில்லை, புலிகளின் குற்றங்களையும் தேட வேண்டும்.ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் இலங்கைக்கு எதிராக மாத்திரமல்ல, விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் நாங்கள் தேடி அறிவோம். அவற்றை வெறுமனே கைவிட்டு விட மாட்டோம்.

விடுதலைப் புலிகளாகட்டும், அரசாங்கமாக இருக்கட்டும். எதிரான குற்றச்சாட்டுக்களை தேடி அறிய சர்வதேச அதிகாரியை அனுப்ப வேண்டும் என்பதை மகிந்த ராஜபக்ச தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதனால், சர்வதேச அதிகாரியை வேண்டாம் என தற்போது கூறமுடியாது. மகிந்த ராஜபக்ச அணியினருக்கு தற்போது வாயில் பிரேக் இல்லை. கூட்டு எதிர்க்கட்சிக்கும் பிரேக் இல்லை எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.