வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சவுதி அரேபியாவிற்கு சென்று கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது மனைவியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவந்து தருமாறு அவரின் கணவர் கோரியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் கொழும்பு – கொட்டிகாவத்தை பிரசேத்தை சேர்ந்த கே.நாமாலி பெரேரா என்ற 44 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயார் என தெரியவந்துள்ளது.
வேலை வாய்ப்பிற்காக குறித்த பெண் கடந்த வருடம் டிசம்பர் மாதம் சவுதி அரேபியா சென்றுள்ளார்.
பின்னர் அவ்வப்பொழுது தனது கணவரிடம் தொலைபேசியில் அழைத்து, பணி செய்யும் வீட்டில் சித்திரவதை செய்வதாகவும், விரைவாக தன்னை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்மாறும் கூறியுள்ளார்.
எனினும் இந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர் நிலையம் தெரிவித்துள்ளதாக கணவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் இது தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு அறிவித்த போதும் எந்தவொரு பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என உயிரிழந்த பெண்ணின் கணவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

