கிளிநொச்சி அக்கராயன்குளத்திற்குட்பட்ட சிறுபோக செய்கை தொடர்பான கலந்துரையாடல்(காணொளி)

259 0

கிளிநொச்சி அக்கராயன் குளத்தின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உரிய காலத்தில் சிறுபோக செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி அக்கராயன்குளத்திற்குட்பட்ட சிறுபோக செய்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று அக்கராயன் நீர்ப்பாசனத்திணைக்கள விடுதியில் நடைபெற்றது.

கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில்,

தற்போது நாட்டில் நிலவும் கடும் வரட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள இரணைமடுக்குளம் உள்ளிட்ட ஒன்பது குளங்களில், கல்மடுக்குளம், அக்கராயன்குளம், புதுமுறிப்புக்குளம், பிரமந்தனாறு குளம், கனகாம்பிகைக்குளம் ஆகிய குளங்களில் உள்ள நீரின் அளவுகளைக் கொண்டு, பிரமந்தனாறுக்குளம், கனகாம்பிக்கைக்குளம் ஆகிய இருகுளங்களின் கீழும் சிறுதானிய செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், ஏனைய மூன்று குளங்களின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அக்கராயன்குளத்தில் தற்போதுள்ள நீரின் அளவைக்கொண்டு ஆயிரத்து 186 தசம் 5 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், முதலாவது நீர் விநியோகம் எதிர்வரும் மே மாதம் 01ஆம் திகதியாகவும், இறுதி விதைப்புத் திகதியாக மே மாதம் 20ஆம் திகதியும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே குளத்தின் நீரின் அளவைக்கொண்டு இவ்வாண்டு சிறுபோக செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், மாவட்டத்தில் அதிகூடிய செய்கை மேற்கொள்ளும் குளமாக அக்கராயன்குளம் காணப்படுவதனால், நீரைச்சிக்கனமாக பயன்படுத்தி உரிய காலத்தில் பயிர் செய்கைகளை மேற்கொண்டு ஒத்துழைக்குமாறு விவசாயிகளுக்கு அறுவுறுத்தப்;பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.சுதாகரன், நீர்ப்;பாசனப் பொறியியலாளர் செந்தூரன், மாவட்ட விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர்,   விவசாய தினைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.