பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஜப்பான் கடற்படைக்கு நன்றி தெரிவிப்பு

172 0
இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படைக்கு வழங்கிய உதவி மற்றும் ஒத்துழைப்புக்காக ஜப்பான் கடற்படைக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் பிரதிநிதிகள் குழுவொன்று நவெள்ளிக்கிழமை (21) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனை கொழும்பில் சந்தித்தனர். இதன் போதே அவர் இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.

ரியர் அட்மிரல் நிஷியாமா தகஹிரோ தலைமையிலான குழுவினரை அமைச்சர் தென்னகோன் வரவேற்றதுடன்  அவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

கடந்த காலங்களில் இலங்கைக்கு ஜப்பான் நல்கிய ஆதரவை நினைவுகூர்ந்த அவர், ஜப்பானிய அரசாங்கத்தின் நீண்டகால நட்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான சிறந்த இருதரப்பு உறவுகளுக்கு நன்றி தெரிவித்தார்.

ஜப்பானிய அதிகாரிகள், இலங்கையின் சிறந்த விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தனர்.

கலந்துரையாடலின் முடிவில் அமைச்சர் தென்னகோன் மற்றும் ரியர் அட்மிரல் நிஷியாமா தகஹிரோ நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.

கடந்த வியாழக்கிழமை (20) இலங்கையை வந்தடைந்த ஜப்பான் கடற் படையின் கப்பலில் ஜப்பானிய பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்படையின் பிரதிப் பிரதம அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் – நடவடிக்கை ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.