இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு – உண்மையை கண்டறிக!

235 0

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விரிவான விசாரணையை மேற்கொண்டு உண்மையை கண்டறியுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு ஸ்ரீலங்கா கடல் எல்லையில் வைத்து இடம்பெற்றதாக கூறப்படும் துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் தமிழ மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், இருவர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கடற்படையினர் மீது இந்திய மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளபோதும் அதனை ஸ்ரீலங்கா கடற்படையினர் முற்றாக நிராகரித்துள்ளனர்.

எனினும் உண்மையைக் கண்டறிவதற்காக உடனடி விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் அறிக்கை ஒன்றின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமைச்சர், உரையாடியதோடு,     இவ்வாறான சம்பவங்கள் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு பாதிப்படைய ஸ்ரீலங்கா இடமளிக்காது எனவும் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை இந்திய மீனவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் கடற்படை தொடர்புபடவில்லை என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், எனினும் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தினார்.

இந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விசாரணை நடத்துவதற்காக சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளமையையும் அவர் வரிவேற்றுள்ளார்.இதேவேளை சிறிய படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா கடற்படை முற்றாக நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.