புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றம் செல்லும்

144 0

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அரச பயங்கரவாதத்தை பலப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டமூலமாகும். அதனால் ஐக்கிய மக்கள் சக்தி இந்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்தை நாட இருக்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி சிரேஷ் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அரசாங்கம் வர்த்தமானிப்படுத்தி இருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சரத்துக்களை பார்க்கும்போது  அரசாங்கம் நினைக்கும் எந்த பிரஜையையும் பயங்கரவாதியாக்கும் உரிமை அரசாங்கத்துக்கு கிடைக்கிறது.

அதேபோன்று இந்த சட்டமூலத்தின் ஊடாக தொழிற்சங்க நடவடிக்கைகள், சிவில் அமைப்புகளின் செயற்பாடுகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. மாணவர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு தடைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை வாசித்துப் பார்த்தால், இது அரச பயங்கரவாதத்தை பலப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டமூலம் என்பது தெளிவாகும். அதனால் ஐக்கிய மக்கள் சக்தி இந்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்.

அத்துடன் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் என்ன என எமக்கு இதுவரை தெரியாது. என்றாலும் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் மூலம், அது சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைகளாக இருக்கலாம் என்றே நாங்கள் நினைக்கிறோம்.

குறிப்பாக மின்சார கட்டண அதிகரிப்பு, புதிய வரிக்கொள்கை போன்ற விடயங்களை ஒன்றன் பின் ஒன்றாக மேற்கொள்ளும்போது மக்கள் விரக்தியடைந்து வீதிக்கிறங்குவார்கள். அதனை தடுப்பதற்கு அதிகாரம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கே அரசாங்கம் அவசரமாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை கொண்டுவந்திருக்கிறது.

அத்துடன் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தைவிட மோசமானதாகும். தற்போது இருக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவேண்டும் என ஐராேப்பிய ஒன்றியம் மனித உரிமை அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் தொடர்ந்து அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தன.

எமது காலத்தில் இதில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும் அதனை செய்துமுடிக்க முடியாமல் போனது. தற்போது சர்வதேசத்தின் கோரிக்கைக்கமைய பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதாக தெரிவித்து, ஜனநாயக வழியில் போராடும் மக்களை, தொழிற்சங்கங்களை அடக்குவதற்கான அதிகாரங்களை அரசாங்கம் இதில் உழைத்துள்ளது.

எனவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் நாட்டின் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளன. அதனால் இதனை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்தை உதவியை நாட இருக்கிறோம் என்றார்.