நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் ஊடாக தற்போதுவரை எமக்கு உரியவாறான நீதி வழங்கப்படவில்லை.
எனவே அவ்வலுவலகத்தின்மீது நாம் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்திருக்கின்றோம். இன்னும் சில நாட்களில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகமும் காணாமல்போகுமா என்று தெரியவில்லை என காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பெரும்பாலும் தெற்கில் ஜனதா விமுக்தி பெரமுனவின் (மக்கள் விடுதலை முன்னணி) எழுச்சியின்போது இடம்பெற்ற வலிந்துகாணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை உள்ளடக்கி கொழும்பைத் தளமாகக்கொண்டியங்கிவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் நேற்று வியாழக்கிழமை சமூக மற்றும் சமய நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
குறிப்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் எவ்வித முன்னேற்றமும் அடையப்படாமை மற்றும் ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்ட இழப்பீடு மற்றும் நட்டஈட்டுத்தொகை என்பன பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படாமை ஆகிய விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்கள், கடந்த 1989 – 1990 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்களால் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினர்.
மேலும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் சர்வதேச சமூகத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் வெறும் கண்துடைப்பு முயற்சியாக மாத்திரமே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், வட-கிழக்கு மாகாணங்களில் அரசாங்கத்தின் பேச்சை நம்பி படையினரிடம் சரணடைந்த பெரும் எண்ணிக்கையானோருக்கு என்ன நேர்ந்தது என்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டத்தின் நியாயத்தன்மை தொடர்பிலும் சுட்டிக்காட்டினர்.

