நாட்டு மக்கள் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் வரிகளை அதிகரித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்திய முன்னாள் நிதியமைச்சர், முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. பொருளாதார நெருக்கடியை நாட்டு மக்கள் இன்னும் எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்வார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும்கூறுகையில்,
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதால் மக்களின் நாளாந்த வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்திய தரப்பினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
பொருளாதார பாதிப்பு நாட்டு மக்கள் மீது முழுமையாக சுமத்தப்பட்டுள்ளது. எரிபொருள், மின்சாரம், நீர் ஆகியவற்றின் கட்டணமும், அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் நடுத்தர மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு உயர்வடைந்துள்ளன.
கடந்த காலங்களில் 8 வீதமாக காணப்பட்ட பெறுமதி சேர் வரி (வெட் வரி) 12 ஆக அதிகரிக்கப்பட்டு தற்போது 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெட் வரி அதிகரிப்பும் நடுத்தர மக்களின் வாழ்க்கை மீதே தாக்கம் செலுத்தும் மறுபுறம் பூச்சியமாக காணப்பட்ட வரியும் 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு உதவி தொகை அறவீட்டுச் சட்டமூலம் அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இந்த வரிச்சட்டத்தை அதிகரித்தால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்காமல் பொருளாதார மீட்சிக்கான கொள்கை திட்டம் வகுக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.
பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்திய முன்னாள் நிதியமைச்சர் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சீன உர விவகாரத்தில் அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இரசாயன உரத்தை தடை செய்து விவசாயிகளை நடு வீதிக்கு கொண்டு வந்தவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,மாறாக பாராளுமன்றத்தின் ஊடாக நடுத்தர மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வரி அதிகரிப்பு குறித்து மாத்திரம் அவதானம் செலுத்தப்படுகிறது.
நாட்டு மக்கள் எவ்வளவு நாட்களுக்கு இந்த துயரத்தை பொறுத்துக் கொள்வார்கள். சபை முதல்வரே இன்று தெல்கந்த சந்தைக்கு செல்லுங்கள் இன்றைய விலை இல்லை நாளை, நாளுக்கு நாள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
பொருளாதார நெருக்கடியினால் நாட்டு மக்கள் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் வரி அதிகரிப்பின் ஊடாக மேலும் அவர்களை நெருக்கடிக்குள்ளாக்கவே அரசாங்கம் அவதானம் செலுத்துகிறது.ஆகவே நாங்கள் இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்றார்.

