போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் பேர் வைத்தியசாலைகளில் அனுமதி

288 0

பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக நாட்டில் சுமார் 40 000 பேர் உணவைப் பெற்றுக் கொள்ள முடியாமல் , போஷாக்கின்மையால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அது மாத்திரமின்றி விபச்சாரமும் 30 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் விரைவாக அதிகரித்துச் செல்கின்றது. பாண், கோழி, உரம், மண்ணெண்ணெய், அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட மேலும் பல பொருட்களை கொள்வனவு செய்வதற்கான செலவு நல்லாட்சி அரசாங்கத்தின் போது 34 028 ரூபாவாகக் காணப்பட்டது.

ஆனால் இன்று அந்த செலவு ஒரு இலட்சத்து 53 309 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. அதாவது பொருட்களின் விலைகள் நூற்றுக்கு 650 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளன.

உலக வங்கியின் தரப்படுத்தலில் உணவு பணவீக்கம் அதிகமாகவுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை 5 ஆவது இடத்திலுள்ளது.

ஜூன் மாதம் 58 சதவீதமாகக் காணப்பட்ட உணவு பணவீக்கம் , ஜூலையில் 66 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலைமையினால் ஒரு வேளை உணவைக் கூட உட்கொள்ள முடியாத 40 000 பேர் உடல் நலக்குறைவினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அது மாத்திரமின்றி பொருளாதார சுமைகள் காரணமாக விபச்சாரம் 30 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக ஏ.என்.ஐ. குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான காரணிகளுக்காகவே ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை வகித்தவர்களை இலக்கு வைத்து வேட்டை நாய்களைப் போன்று சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாதுகாப்பதற்கான பொறிமுறையொன்று உருவாக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை விளக்கவுரையில் தெரிவித்திருந்தார்.

எனினும் இதுவரையில் அதற்கான நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. ஆர்ப்பாட்டங்கள் இன்னும் நிறைவடையவில்லை. அவை அவ்வப்போது தலைதூக்கும். நாம் அவற்றுக்காக முன்னிற்போம் என்றார்.