அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற போதிலும், பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதுவரையில் எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.
எனவே அந்த மக்களுக்கு நேரடி நிதி நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.
அத்தோடு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்ற இந்த வாரம் மிகவும் தீர்க்கமானதாகும்.
நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தால் பாரதூரமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இம்மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர்மட்ட இணக்கப்பாட்டை எட்ட முடியும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பினை வெளியிட்டுள்ளது.
ஆனால் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார்.
ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டிய பின்னரே கடன் வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்ட வேண்டுமெனில் கடன் முகாமைத்துவம் தொடர்பில் முறையான வேலைத்திட்டத்தினை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் முன்வைக்க வேண்டும்.
கடன் வழங்குனர்களுடன் எவ்வித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்காது எவ்வாறு , வேலைத்திட்டத்தினை தயாரிக்க முடியும் என்பது எமது புரியவில்லை. எனவே இந்த விடயத்தில் வெளிப்படை தன்மை பேணப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டுவதற்கான பொருளாதார மறுசீரமைப்புக்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதன் காரணமாகவே மின் கட்டண அதிகரிப்பு , மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு என்பன முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொருளாதார மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அதற்காக அரசாங்கம் பின்பற்றும் முறைமையுடன் எம்மால் இணங்க முடியாது.
பொருளாதார மறுசீரமைப்பிற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான எமது நிலைப்பாட்டினை பாராளுமன்ற அமர்வின் போது வெளிப்படுத்துவோம்.
தினந்தோறும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துச் செல்கின்ற போதிலும் , இதுவரையில் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நேரடி நிதி நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்ற இந்த வாரம் மிகவும் தீர்க்கமானதாகும். நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்ட முடியும் என்றே நாமும் எதிர்பார்க்கின்றோம்.
மாறாக இந்த முயற்சி தோல்வியடைந்தால் , எவ்வித பாகுபாடும் இன்றி நாட்டிலுள்ள சகல மக்களும் மிகப் பாரதூமான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

