அ.தி.மு.க. தொண்டர்கள் மனதை மாற்றும் முயற்சியில் ஓ.பி.எஸ்.

161 0

அ.தி.மு.க.வில் நிர்வாகிகளை பொறுத்தவரை பெரும்பான்மையினர் எடப்பாடி பழனிசாமி பக்கமே இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் ஒற்றைத்தலைமை என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர் செல்வத்தின் சமரச திட்டங்களையும் அவர் நிராகரித்து விட்டார். ஓ.பன்னீர் செல்வத்தை பொறுத்தவரை கட்சியினர் தங்கள் பக்கம் வருவார்கள் என்று காத்திருந்ததுதான் மிச்சம். இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை. சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி தீர்ப்பில் ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதும் பலர் தங்கள் பக்கம் வந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அதுவும் நடக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த ஓ.பன்னீர் செல்வம் சொந்த ஊரான தேனிக்கு சென்று விட்டார்.

அங்குள்ள பண்ணை வீட்டில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி முக்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரும் அ.தி.மு.க.வுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விட்டார். ஆனாலும் கட்சியினர் மத்தியில் எந்த சலனமும் இல்லை. தனியாக பொதுக்குழுவை கூட்டி தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். அதன் மூலம் சட்டப்போராட்டத்தில் வெல்ல முடியும் என்று கருதுகிறார்.

அ.தி.மு.க.வில் 2663 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் கடந்த ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்த பொதுக்குழு கூட்டத்துக்கு வந்தனர். இதுவே எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. ஆனால் அப்போதைய பரபரப்பில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பொதுக்குழு உறுப்பினர்களை திரட்டி சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இப்போது நிலை மாறி இருக்கிறது. விட்டுக் கொடுக்காத தலைவர்களால் கட்சி கெட்டுப்போகுமா என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது. இதை சாதகமாக்கி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் இழுப்பதற்கான வியூகத்தை ஓ.பி.எஸ். வகுத்துள்ளார்.

அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் இது தொடர்பாக ஆலோசனை வழங்கி இருக்கிறார். மாவட்டங்களில் இருக்கும் அடிமட்ட தொண்டர்கள், நிர்வாகிகளிடம் பேசுங்கள். எடப்பாடி பழனிசாமி தனியாக நிற்பதால் அ.தி.மு.க. வெல்ல முடியுமா?

ஜெயலலிதா இருந்த போதே பிளவுபட்ட அ.தி.மு.க.வால் சாதிக்க முடியவில்லை. எனவே ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் கட்சிக்கு பலம் என்பதை அவர்களிடம் சொல்லி யோசிக்க வையுங்கள். அதன்மூலம் அவர்களை நம் பக்கம் இழுங்கள்.

நமது பலத்தை நாம் நடத்தும் பொதுக்குழுவில் நிரூபிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். தற்போது ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் சொந்த கட்சியினரை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இதுபற்றி ஓ.பி.எஸ். தரப்பு நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “கட்சியினர் பிளவுபட்டு நிற்பதை தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள். அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நாங்கள் வெற்றி பெறுவது உறுதி” என்றனர்.