திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ரெங்கநாயகி கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சாமி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாகவும், இதனை மற்றொரு தரப்பினருக்கு விற்க முயற்சி செய்வதாகவும் சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்னையில் இருந்து வந்த போலீசார் கடந்த 2 நாட்களாக வடமதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாறுவேடத்தில் நோட்டமிட்டு வந்தனர்.
சிலை கடத்திய கும்பலிடமே தொடர்பு கொண்டு தாங்கள் சிலையை விற்பனை செய்ய வந்த புரோக்கர்கள் எனக்கூறி அறிமுகமாயினர். அதனை நம்பி அந்தகும்பல் சாமி சிலைகளை பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு கடந்த ஆண்டு ஒரு கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சந்திரசேகர், பார்வதி ஆகிய 5 வெண்கல சிலைகள் இருந்தது தெரியவந்தது.
இதன்மதிப்பு ரூ.12 கோடியாகும். இதனைதொடர்ந்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்ததுடன் சாமி சிலைகளையும் பறிமுதல் செய்து சென்னைக்கு அழைத்துச்சென்றனர்.
பிரபாகரன், ஈஸ்வரன் உள்பட 4 பேரை கைது செய்த போலீசார் மேலும் சிலரை தேடி வருகின்றனர். மேலும் அந்த கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்கள் யார்? இதனை யாருக்கு விற்பனை செய்ய முயன்றார்கள், இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாமி சிலைகளை விற்பனை செய்ய முயன்ற கும்பல் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

