அரச அடக்குமுறைகள் தொடருமாயின் அதற்கு எதிராக மக்களுடன் போராடுவோம் – எம்.ஏ. சுமந்திரன்

215 0

அரசாங்கம் மக்கள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையை பிரயோகித்துக் கொண்டிருக்கிறது. மக்களின் எழுச்சி போராட்டத்தினால் ஆட்சி பீடமேறிய அரசாங்கம் , அந்த போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்களை வேட்டையாடும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அரசாங்கத்தின் அடக்குமுறைகள் தொடருமாயின் அதற்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடுவோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ‘சர்வகட்சி ஒன்றிணைவு’ என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சிகளின் தலைவர் இணைந்து நடத்திய கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

புதிய அரசாங்கம் மக்கள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையை பிரயோகித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் எழுச்சி போராட்டங்களினால் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்களினாலேயே இந்த அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. போராட்டக்காரர்களின் முதுகில் ஏறி ஆட்சியைக் கைப்பற்றியவர்கள், தற்போது அந்த போராட்டக்காரர்களையே வேட்டையாடத் தொடங்கியுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய அக்கிராசன உரையில் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் வன்முறையற்றவையாகவும் , அமைதியானவையாகவும் காணப்பட்டதாக சான்றிதழ் வழங்கியிருந்தார். ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே தலைமை தாங்கியவர்களை தற்போது அரசாங்கம் கைது செய்து கொண்டிருக்கிறது.

புதனன்று கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் பிரபல தொழிற்சங்கவாதியொருவராவார். அவரை கைது செய்ததை நாம் வன்மையாகக் கண்டிருக்கின்றோம்.

இவ்வாறான கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு , ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கு மக்களுக்கு உரிமையுண்டு. அது சட்ட மீறல் அல்ல. இவ்வாறான விடயங்கள் ஊடாக அரசாங்கம் தான் எதிர்கொள்ள வேண்டியுள்ள பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்டவற்றிலிருந்து மக்களை திசைதிருப்புவதற்கே முயற்சிக்கிறது.

இந்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து அரசாங்கம் அதன் பிரதான கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்து தவறிக் கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான மாற்று திட்டம் அரசாங்கத்திடம் இல்லை.

அரசாங்கத்தின் அடக்குமுறைகள் தொடருமாயின் அதற்கு எதிராக அனைத்து மக்களுடனும் ஒன்றிணைந்து வெ வ்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.