அரசியலும் ஓய்வும்

240 0

முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரர் சமால் ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை கவனிப்புக்குரியதாகிறது.

மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவரது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்கவேண்டும் என்றும் பதவிகளைத் துறப்பதற்கு எவருமே தயாராயிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

” 90 வருடங்களாக இலங்கை அரசியலில் இருந்துவரும் ராஜபக்சாக்கள் தங்களது சொத்துக்களை அடமானம் வைத்திருக்கிறார்கள். அந்த சொத்துக்களில் சிலவற்றை நாம் இன்னும் மீட்கவில்லை ” என்றும் சமால் ராஜபக்ச தனதுரையில் குறிப்பிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

;இலங்கை முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்த நிலையில் மக்கள் கிளர்ந்தெழுந்து ராஜபக்சாக்கள் கூண்டோடு வீட்டுக்குப் போகவேண்டும் என்று கோரி வீதிகளில் இறங்கியதையடுத்தே அந்த குடும்பத்தின் மூத்தவர் இவ்வாறு கூற நிர்ப்பந்திக்கப்பட்டார் என்பதில் சந்தேகமில்லை.
தனது இரண்டாவது பதவிக்காலத்தில் இரு வருடங்கள் மீதி இருந்த நிலையில் 2015 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்திய மகிந்த மூன்றாவது பதவிக்காலத்துக்கு நாட்டு மக்களிடம் ஆணை கேட்டார்.

அந்த தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராக களமிறக்கப்பட்ட தனது முன்னாள் சகாவான மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் தோல்வி கண்டதையடுத்து அலரிமாளிகைக்கு ஐக்கிய தேசிய கட்சியின்  தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துப்பேசி தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே மகிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறி அம்பாந்தோட்டை மெதமுலானவுக்கு குடும்பத்துடன் சென்றார்

அந்த நேரத்தில் சமல் ஏன் இன்று கூறிய ஆலோசனையை அவருக்கு கூறவில்லை. தங்களது தவறான ஆட்சிமுறை காரணமாக மக்களால் அபகீர்திக்குள்ளாக்கப்பட்ட பின்னரே இத்தகைய நிதானம் மூத்த சகோதரருக்கு வந்திருக்கிறது.

இப்போது மக்கள் வீதிகளில் இறங்கி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை வீட்டுக்குப் போகுமாறு கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். இலங்கை அரசியல் முன்னென்றுமே கண்டிராத வகையிலான மக்கள் எழுச்சிப் போராட்டங்களை இப்போது தரிசிக்கிறது

காலத்துக்கேற்ற நவீனமயமான அமைதிப்போராட்ட வழிமுறைகளை இன்றைய இளஞ்சந்ததியினர் கடைப்பிடிப்பதையும் காண்கிறோம். கொழும்பு காலிமுத்திடலில் ‘கோட்டா கோகம’ என்ற அரசியல் கிராமம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து விலகக்கோரி அலரிமாளிகை முன்பாக ‘மைனாகோகம’ என்ற கிராமமும் தோன்றியது. அந்த இரு அரசியல் கிராமங்களும் இன்று சர்வதேச அளவில் பேசப்படுகின்றன. அவற்றின் மீது தனது ஆதரவாளர்களை ஏவிவட்டு தாக்குதல் நடத்தச் செய்துவிட்டே மகிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

ஆனால் கோட்டாபயவோ 69 இலட்சம் மக்களின் ஆணை தனக்கு இருக்கிறது என்று கூறிக்கொண்டு பதவிவிலக முடியாது என்று அழுங்குப்பிடியாக நிற்கிறார். நாட்டில் சுபிட்சத்தை ஏற்படுத்தப்போவதாக மக்களுக்கு தேர்தலில் வாக்குறுதி அளித்துக்கொண்டே கோதாபய ஆட்சியதிகாரத்துக்கு வந்தார்.

ஆனால் இன்று அவரது இரண்டரை வருட ஆட்சியில் இலங்கை வங்குரோத்து அடைந்துவிடடது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கும் நிலையில்  ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கப்பெற்ற ஆணையை காரணம் காட்டி அவர் பதவியில் நீடிப்பது எதுவிதத்திலும் பொருத்தமானதல்ல.வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களின் ஆணைக்கு இனிமேலும் ஜனாதிபதி உரிமைகோர முடியாது.

இத்தகைய சூழ்நிலையில் சமால் ராஜபக்ச தனது இன்னொரு இளைய சகோதரரான கோதாபயவிற்கு எத்தகைய ஆலோசனையைக் கூறுவார் என்று கேட்கவேண்டியிருக்கிறது.

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியில் இருந்தவர்கள் தங்களது பதவிக்காலங்களின் முடிவில் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பது குறித்து இச்சந்தர்ப்பத்தில் திரும்பிப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும்

முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன. அவர்தான் அந்த ஆட்சிமுறையை 1978 அரசியலமைப்பின் மூலம் அறிமுகப்படுத்தியவர். தனது இரண்டாவது பதவிக்காலத்தின் இறுதியில் 1988 பிற்பகுதியில் பதவியில் இருந்து இறங்கி தனது பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாசவுக்கு வழிவிட்டார்.

1988 டிசம்பர் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவி திருமதி ஸ்ரீமா பண்டாரநாயக்கவை தோற்கடித்த பிரேமதாச தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒன்றரை வருடங்கள் இருந்த நிலையில் 1993 மே தினத்தன்று கொழும்பில் தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்

அந்த சம்பவத்தையடுத்து அன்றைய தினமே பிரதமர் டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.அவர் பிரேமதாசவின் முதலாவது பதவிக்காலம் முடிவடையும் வரை அதாவது 1994நவம்பர் வரை ஜனாதிபதியாக இருந்துவிட்டு ஓய்வுபெற்றுக்கொண்டார். கண்டியில் பிலிமத்தலாவையில் தனது ஓய்வுகாலத்தை அமைதியாகக் கழித்த விஜேதுங்க பல வருடங்கள் கழித்து காலமானார்.

1994 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது இரண்டாவது பதவிக்காலத்தின் இறுதியில் 2005 நவம்பரில் பதவியில் இருந்து இறங்கினார்.அப்போது அவருக்கு 60 வயது. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதற்குரிய வயது அல்ல. அவர் அரசியல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடவே செய்தார். இன்றும் கூட அரசியல் நிலைவரங்கள் குறித்து அவர் கருத்துக்களை வெளியிட்டவண்ணமே இருக்கிறார்.

அவருக்குப் பிறகு 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச தனது இரண்டாவது  பதவிக்காலத்தின் தொடக்கத்தில் 2010 அக்டோபரில் அரசியலமைப்புக்கான 18 வது திருத்தத்தைக் கொண்டுவந்து தனது அதிகாரங்களை அதிகரித்ததுடன் ஜனாதிபதி ஒருவருக்கு இருந்த இரு பதவிக்கால வரையறையையும் நீக்கினார்.

போர் வெற்றி காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் தனக்கு இருந்த அமோக செல்வாக்கு நிலையானதாக இருக்கும் என்ற நினைப்பில் மகிந்த ராஜபக்ச தொடர்ந்து பல வருடங்கள் ஜனாதிபதியாக இருப்பது குறித்து கனவுகண்டார்.

ஆனால், மூன்றாவது பதவிக்காலத்துக்கு மக்களிடம் ஆணை கேட்டபோது அவர் தோல்வி கண்டார். ஆனால், தன்னை வெற்றி கொண்ட மைத்திரிபால சிறிசேனவையும் விட சிங்கள மக்களின் வாக்குகள் தனக்கே கூடுதலாக கிடைத்ததால் தொடர்ந்து அரசியலில் இருக்க அவர் முடிவெடுத்தார்.2015 ஆகஸ்ட பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக வந்தார்

அவரைப் பின்பற்றியே மைத்திரியும் இப்போது பாராளுமன்ற உறுப்பானராக இருக்கிறார். நாட்டின் அதியுயர் பதவியான நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஆட்சியில் இருந்து விட்டு சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக வருவதென்பது உண்மையில் அரசியல் முதிர்ச்சியற்ற செயலேயாகும். தாங்கள் வகித்த முன்னைய அதியுயர் பதவியையே இவர்கள் கொச்சைப்படுத்துகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

இப்போது கோதாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இரண்டரை வருடங்கள் பதவிவகித்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு கொந்தளிக்கிறது.

ஆனால் அவரோ பதவியில் இருந்து இறங்கத்தயாராயில்லை. பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்ததுடன் மக்களினால் வெறுக்கப்பட்டு பதவிவிலக நிர்ப்பந்திக்கப்பட்ட முன்னைய அமைச்சரவையின் உறுப்பினர்களையே திரும்பவும் அமைச்சர்களாக நியமித்து புதிய அரசாங்கத்தை அமைப்பதாக படம் காட்டிக்கொண்டிருக்கிறார்.இந்த ஏற்பாடுகளை நாட்டு மக்கள் ஏற்கப்போவதில்லை. தொடர்ந்தும் நாடு கொந்தளிக்கப்போகிறது

வீரகத்தி தனபாலசிங்கம்