நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு 500 மில்லியன் டொலராகக் குறைவடைந்துள்ளது. ஆனால் இவ்வாண்டில் மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது.
பொருளாதார நெருக்கடியை எவ்வாறு தீர்ப்பது என்ற திட்டமிடலற்ற இந்த அரசாங்கம் இலங்கையை சோமாலியாவாக மாற்றிய பின்னரே ஆட்சியை விட்டுச் செல்லும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இளைஞர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் எதுவுமே நடக்காததைப் போன்று செயற்படுகின்றமையானது, எதிகாலத்தில் தோற்றம் பெறக்கூடும் மிகவும் மோசமான பொருளாதார நிலைமைக்கான அறிகுறியாகும்.
இரவு வேளைகளில் மக்களை இருளில் தள்ளியுள்ள அரசாங்கம், பகலில் அவர்களை எரிபொருள் வரிசையில் காத்திருக்க வைத்திருக்கிறது. எரிபொருள் நெருக்கடியின் காரணமாக மீனவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது வாழ்வாதாரத்திற்கான அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலையிலுள்ளனர்.
ரஷ்ய – உக்ரேன் மோதலால் ஏற்படப் போகும் உலக பொருளாதார நெருக்கடிகளை எவ்வாறு எதிர்கொள்ளப் போவது என்பது தொடர்பில் உலக நாடுகள் கலந்துரையாடி முன்னேற்பாடுகளை செய்து வருகின்ற நிலையில் , இலங்கை மாத்திரம் அவ்வாறு எந்த நெருக்கடியும் ஏற்படாது என்ற எதிர்வு கூறலுக்கமைய எவ்வித முன்னேற்பாடுகளையும் செய்யாமலுள்ளது.
உலகம் பாரதூரமானதொரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளப் போகிறது. ரஷ்யா , உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக முன்னெத்துள்ள போரால் உலகம் எதிர்கொள்ளப் போகும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.
இந்த யுத்தத்திற்காக ரஷ்யா நாளொன்று 15 பில்லியன் டொலர்களை செலவிடுகிறது. மறுபுறம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தமது அணு ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. உலக பொருளாதாரத்தின் நிதி சக்தியே இவ்வாறு வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ரஷ்யாவிலிருந்து எரிவாறு மற்றும் எரிபொருள் என்பன சர்வதேச சந்தைகளுக்கு கிடைக்கப் பெறாமையின் காரணமாக இவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக ஏனைய நாடுகள் அரபு நாடுகளை நோக்கிச் செல்கின்றன.
இதன் போது அரபு நாடுகளில் எரிபொருளுக்கான கேள்வி அதிகரிக்கும். எனவே எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கும். 2014 ஆம் ஆண்டின் பின்னர் மசகு எண்ணெய்க்கான அதிகூடிய விலை கடந்த ஞாயிறன்று பதிவாகியது. அதாவது மசகு எண்ணெய்யின் விலை 100 லொடர் வரை உயர்வடைந்துள்ளது.
இம்மாதத்தின் மத்தியப்பகுதியில் மசகு எண்ணெய்யின் விலை 115 – 120 டொலர் வரையிலும் உயர்வடையக் கூடும் என்று உலக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வுடன் உலக சந்தையில் அனைத்து பொருட்களின் விலைகளும் சேவை கட்டணங்களும் உயர்வடையும். இது அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும். இதன் காரணமாக இந்த நெருக்கடிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் உலகின் அனைத்து நாடுகளும் அவதானம் செலுத்தி வருகின்றன.
ஆனால் எமது அரசாங்கம் அவ்வாறு எந்த ஆயத்தங்களையும் முன்னெடுப்பதாக தெரியவில்லை. நமக்கு அவ்வாறு எந்த பாதிப்புக்களும் ஏற்படாது என்ற எண்ணத்தில் அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. இலங்கையை வங்குரோத்து நிலைமையை அடைந்து வரும் நாடாகவே பொருளாதார நிலைமைகள் காண்பிக்கின்றன.
எனவே, உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து அரசாங்கம் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றாலும், அவர்கள் எதனையும் செய்யாமலிருப்பது கடமை தவறிய செயலாகும்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தமையின் காரணமாக ஐ.ஓ.சி. நிறுவனம் கடந்த வாரம் எரிபொருள் விலையை அதிகரித்தது. இதன் காரணமாக இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 200 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு கோரிக்கை விடுத்த போதிலும் , நிதி அமைச்சு அதற்கான அனுமதியை வழங்கவில்லை. ஏழு மூளை கொண்ட நிதியமைச்சர், எவ்வித பொருளாதார அறிவும் அற்ற தோல்வியடைந்த நிதியமைச்சராக வரலாற்றில் இடம்பிடிக்க உள்ளார்.
நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. நாம் அனைத்து சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்தை நாடி தீர்வினைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளோம்.
எனினும் திமிர்பிடித்த அரசாங்கம் அதனை செய்யவில்லை. எனினும் நிதி அமைச்சர் தற்போது சர்வதேச நாணய நிதியத்தை நாடவுள்ளதாகக் கூறுகின்றார். குதிரை சென்ற பின்னர் லயத்தை மூடும் பணிகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் எரிபொருள் கையிருப்பில் இல்லை. வீட்டில் பொருள்கள் முடிந்த பின்னர் கடைக்குச் சென்று மீண்டும் அவற்றை வாங்குவதைப் போன்றுதான் அரசாங்கம் எரிபொருளை இறக்குமதி செய்கிறது. இதனால் நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் இன்று எரிபொருள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
எந்தவொரு நபருக்கும் தொழிலை செய்யக் கூடிய சூழல் இல்லை. சுற்றுலா சென்றவர்கள் எரிபொருள் இன்மையால் எரிபொருள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
பேரூந்து சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளன. பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குரிய எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் பெரும்பாலான நேரங்களில் மூடியே உள்ளன.
எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தவுள்ளதாக வலு சக்தி அமைச்சர் கூறுகின்றார். எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் தற்போது அதனையே செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை வலு சக்தி அமைச்சர் அறிந்திருக்கவில்லை போல.
கொழும்பிற்கு வெளியில் பெரும்பாலான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளொன்றுக்கு 500 ரூபாவிற்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுகிறது.
முச்சக்கரவண்டிக்கு 800 ரூபாவிற்கும் , கார் உள்ளிட்ட ஏனைய வாகனங்களுக்கு 2000 ரூபாவிற்கும் , பேரூந்துகளுக்கு 2500 ரூபாவிற்கும் , சொகுசு வாகனங்களுக்கு 3000 ரூபாவிற்கும் எரிபொருள் வழங்கப்படுகிறது.
இதனை அரசாங்கம் என்று எண்ணுவது கடினமாகும். அரசாங்கம் என்றால் நாட்டு மக்களைப் பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும. ஆனால் அரசாங்கம் அதற்கு முரணாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. எரிபொருள் வரிசையில் காத்திருக்கின்ற இளைஞர்கள் , ‘வேலை செய்யும் எமது வீரர்’ என்ற பாடலை ஒலிக்கச் செய்கின்றனர்.
மக்கள் தமது துன்பத்தை அவ்வாறு தான் மறக்கின்றனர். அரசாங்கம் அதை புரிந்து கொள்ளவில்லை. காலையில் எரிபொருள் வரிசையில் நின்று , மாலையில் வீடு திரும்பினால் மின்சாரம் இல்லை. எரிபொருள் இன்மையால் பல மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 5 மணித்தியாலங்கள் மின் துண்டிக்ப்பட்டால் முதலீட்டாளர்கள் வரப் போவதில்லை. இருப்பவர்களும் திரும்பிச் செல்லவே எண்ணுகின்றனர்.
பொருளாதார நெருக்கடியால் நாடு நாளுக்கு நாள் அதல பாதாளத்திற்குள் சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு தற்போது 500 மில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாண்டு மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது.
எவ்வித திட்டமிடலும் அற்ற இந்த அரசாங்கம் இலங்கையை இன்னொரு சோமாலியாவாக மாற்றிய பின்னரே ஆட்சியை விட்டுச் செல்லும். நாட்டை கட்டியெழுப்பக் கூடிய கட்சி ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமேயாகும். அனுபவமிக்க ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த நாட்டை ஒப்படைத்தால்தான் இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும். அதைத் தவிர வேறு எந்த கட்சியாலும் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்றார்.

