தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. நாளை நடைபெறும் முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுகிறார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை(திங்கட்கிழமை) தொடங்குகிறது. முதல் நிகழ்ச்சியாக கவர்னர் உரையாற்றுகிறார்.
இதற்கான அறிவிப்பாணையை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் 12-ந் தேதியன்று பிறப்பித்தார். அதில், “23-ந் தேதியன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டப்படவேண்டும் என்று அழைப்பு விடுக்கப்படுகிறது” என்று கூறப்பட்டு இருந்தது.
இதன் அடிப்படையில் சட்டசபை செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக சட்டமன்ற பேரவையின் கூட்டத்தை கவர்னர் 23-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார். அன்று சட்டசபையில் காலை 10 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்துவார்” என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 9.55 மணிக்கு சட்டசபைக்கு கவர்னர் வருகை தருவார். அவரை மரபுப்படி, சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று, சட்டசபைக்குள் அழைத்து வருவார்கள். அங்கு சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமருவார்.
10 மணி ஆனதும் கவர்னர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தத் தொடங்குவார். சுமார் ஒரு மணிநேரம் அவர் உரை நிகழ்த்துவார். பின்னர் அதன் தமிழ் மொழியாக்கத்தை சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார். அத்துடன் நாளை சட்டசபை நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.
கவர்னர் உரையில் பொதுவாக அரசின் சாதனைகள், மேற்கொண்டு வரும் திட்டங்கள், புதிதாக கொண்டுவரப்படும் திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும். எனவே, புதிய திட்டங்களை கவர்னர் உரையில் எதிர்பார்க்கலாம்.
23-ந் தேதி சட்டசபை நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடும். அதில், சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்படும்.
மறுநாள் 24-ந் தேதியன்று சட்டசபையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற கட்சித் தலைவர்கள், எதிர்கட்சித்தலைவர், முதல்-அமைச்சர், சபாநாயகர் உரையாற்றுவார்கள்.
மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உள்பட மறைந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமி, தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, கர்நாடக இசைக்கலைஞர் பால முரளி கிருஷ்ணா, கியூபா முன்னாள் கவர்னர் பிடல் காஸ்ட்ரோ ஆகியோர் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். அதைத்தொடர்ந்து மறைந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்படும்.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் 25-ந் தேதி கொண்டு வரப்பட்டு எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு விடப்படும். இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேச சட்டமன்றத்தில் உள்ள எல்லா கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு தரப்படும்.
30-ந் தேதியன்று விவாதம் முடிவுறும் என்றும் அன்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துப் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். எனவே, சட்டசபையில் இருக்கைகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவை முன்னவராக தற்போது முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்தான் நீடிக்கிறார். சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு வேறு மூத்த அமைச்சர் ஒருவருக்கு அவை முன்னவர் பொறுப்பை மாற்றி உத்தரவு வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.
பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ள சூழ்நிலையில் 23-ந் தேதி சட்டசபை கூடுகிறது. மேலும் ஜல்லிக்கட்டு விவகாரம், வறட்சி நிவாரணம், விவசாயிகள் சாவு, குடிநீர் பற்றாக்குறை உட்பட பல்வேறு பிரச்சினைகளை தமிழகம் சந்தித்து வருகிறது.இந்த பிரச்சினைகள் அனைத்தையும் எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத் தொடரில் கிளப்பும். எனவே, இந்த சட்டசபை கூட்டத்தொடரில் காரசார விவாதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளை தற்போது தனி அதிகாரிகள் நிர்வகித்து வருகின்றனர். அவர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கான மசோதா இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.
மேலும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

