தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழா

322 0

201701220432436639_Jayalalithaa-photo-in-Tamil-Nadu-Assembly-opening-ceremony_SECVPFதமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத் திறப்பு விழாவை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

உடல்நல குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தார்.

அவரது உருவப்படத்தை தமிழக சட்டசபையில் திறந்துவைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக தனி விழாவை பிரமாண்டமான அளவில் நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த விழாவை நடத்தும் இடம், நாள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தமிழக சட்டசபையில் ஏற்கனவே மகாத்மா காந்தி உள்பட பல பிரமுகர்களின் படங்கள் வைக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் வரைபடங்களாகும். அதுபோல ஜெயலலிதாவின் படமும் வரையப்படும் என்றும், கவின் கலைக்கல்லூரி மூலம் அவரது படத்தை வரைய நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அவரது படத்தை திறந்துவைப்பதற்கு முக்கிய பிரமுகர் யாரை அழைக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தமிழக சட்டசபையில் உள்ள மகாத்மா காந்தியின் படத்தை 24.7.1948 அன்று அப்போதைய கவர்னர் ஜெனரல் சி.ராஜகோபாலாச்சாரியார் திறந்துவைத்தார். சி.ராஜகோபாலாச்சாரியாரின் படத்தை 23.8.1948 அன்று அப்போதைய பிரதமர் நேரு திறந்துவைத்தார்.

திருவள்ளுவரின் படத்தை அப்போதைய துணை ஜனாதிபதி ஜாகீர் உசேன் 22.3.1964 அன்று திறந்துவைத்தார். அண்ணாவின் படத்தை 10.2.1969 அன்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திறந்துவைத்தார். காமராஜரின் உருவப்படத்தை 18.8.1977 அன்று அப்போதைய ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி திறந்துவைத்தார்.

தந்தை பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் ஆகியோரின் உருவப்படங்களை 9.8.1980 அன்று அப்போதைய கேரள மாநில கவர்னர் ஜோதி வெங்கடாச்சலம் திறந்துவைத்தார். எம்.ஜி.ஆரின் படத்தை 31.1.1992 அன்று அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.