வடக்கில் கடந்த 20 நாட்களில் 300இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

196 0

வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நேற்றுவரையான காலப்பகுதியில் 351 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் அவரது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நேற்று வரை 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், வவுனியா மாவட்டத்தில் 234 பேருக்கும், மன்னாரில் 70 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 32 பேருக்கும் கிளிநொச்சியில் பத்துப் பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களுக்கு கடந்த வாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கொரோனா தொற்று அபாயம் கூடிய பகுதியில் இருந்து அபாயம் குறைந்த பகுதிக்கு வருகை தருவோரை தமது அனுமதியின்றி தனிமைப்படுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் அங்கிருந்து வருபவர்களை தற்போது நாங்கள் தனிமைப்படுத்துவதில்லை. அப்படி கட்டாயமாக தனிமைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டால் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியைப் பெற்று தனிமைப்படுத்தும் நடவடிக்கையை எதிர்காலத்தில் மேற்கொள்வோம்.

அத்தோடு, தற்போது நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கையை மீளக் கொண்டுவருவதற்காக பல கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பாடசாலைகள், சினிமா திரையரங்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு மாகாணத்திலுள்ள சந்தைகளை மீளவும் பழைய இடங்களில் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், திருமண மண்டபங்களில் ஆகக்கூடியது 150 பேருடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கின்றோம். மேலும் ரயில் சேவைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளன.

இப்படியான ஒரு சூழ்நிலையில், கொரோனா தொற்று அபாயம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த வேண்டாம் எனும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.