முன்னாள் மேயர் கொலையில் திமுக பிரமுகர்களுக்கு தொடர்பு உண்டா? – சிபிசிஐடி விசாரணை

430 0

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர்களோ அல்லது வேறு யாரும் உள்ளார்களா .

நெல்லையைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகிய 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பாளை குற்றப்பிரிவு போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளி கார்த்திகேயனை கைது செய்தனர். கைதான கார்த்திகேயன் தி.மு.க. பெண் பிரமுகரான சீனியம்மாளின் மகன் ஆவார். இவர், தனது தாயாரின் அரசியல் வாழ்க்கை சரிந்ததற்கு, உமா மகேஸ்வரிதான் காரணம் என்று அவரையும், அவரது கணவர் முருகசங்கரனையும் குத்திக்கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். தான் கொலை செய்தது வெளியே தெரியாமல் இருக்க, வீட்டுக்கு வந்த வேலைகாரபெண் மாரியையும் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து கார்த்திகேயனை நீதிபதி நிஷாந்தினி முன்பு ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை வழக்கில் தி.மு.க. பிரமுகர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால், விரிவான விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. முதல் கட்டமாக நேற்று முன்தினமே சி.பி.சி.ஐ.டி. பிரிவு எஸ்.பி. விஜயகுமார், டி.எஸ்.பி. அனில்குமார், இன்ஸ்பெக்டர் பிரைசந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று நெல்லை மாநகர போலீசார் இந்த வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு அனுப்பினர். அதை அவர்கள் இன்று முறைப்படி பெற்றுக் கொண்டு விசாரணையை தொடங்கினர்.

கொலை நடந்த விபரத்தை முதலில் பார்த்த உமா மகேஸ்வரியின் மகள் கார்த்திகா, அவரது கணவர் லால்பகதூர் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். பின்னர் கொலையாளி கார்த்திகேயனை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதற்காக நாளை அல்லது 5-ந் தேதி (திங்கட்கிழமை) முறைப்படி கோர்ட்டில் மனுதாக்கல் செய்கிறார்கள். கார்த்திகேயனிடம் 15 நாள் விசாரணை நடத்த அனுமதி கேட்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் தி.மு.க. பெண் பிரமுகரான சீனியம்மாள் மற்றும் அவரது கணவர் தன்னாசி ஆகியோருக்கும் முறைப்படி சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த கொலையில் வேறு தி.மு.க. பிரமுகர்கள் யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். கொலை செய்த கார்த்திகேயனின் பின்னணியில் வேறு தி.மு.க. பிரமுகர்களோ அல்லது வேறு யாரும் உள்ளார்களா என்றும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை, சாதாரண போலீஸ் போல் அதிரடியாக உடனே நடைபெறாது என்றும், விசாரணை நடத்த வேண்டியவர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களை அலுவலகத்துக்கு வரவழைத்து தான் விசாரணை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு சற்று கால தாமதமாகும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கூறிவருகிறார்கள்.