காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரி கிளிநொச்சியில் திரண்டுள்ள மக்கள்(காணொளி)

399 0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் இன்று (25) ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வடகிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் திரண்டு மாபெரும் கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இலங்கை இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யுத்த சூழலில் கடத்தப்பட்டு பல்வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கடந்த பத்து வருடமாக அவர்களது உறவுகள் போராடி வருகின்றனர். 

இவர்களுக்கான எந்த தீர்வையும் அரசு வழங்காத நிலையில் சர்வதேசத்தின் உதவியை நாடி சர்வதேச விசாரணையே எமக்கான தீர்வு என தெரிவித்து வடக்கு கிழக்கு எங்கும் கடந்த இரண்டு வருடமாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

அந்தவகையில் கடந்த 2017.02.25 அன்று கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலிலே ஆரம்பமாண காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் போராட்டம் இரண்டு வருடங்களை நிறைவு செய்து மூன்றாவது வருடத்தில் கால்பதிக்கிறது. 

இந்நிலையில் இன்று 2 வருடங்களை நிறைவு செய்து மூன்றாவது வருடத்தில் வீதியில் இருக்கும் மக்களுக்கு தீர்வு கோரியும் இன்று ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வு ஆரம்பமாகும் நிலையில் வடகிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கை அரசுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்க கூடாது எனவும் வலியுறுத்தியும் பாரிய அளவிலான போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 

வடக்கின் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த வலிந்து ஆக்கப்பட்டவர்களது உறவுகள் கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த வலிந்து ஆக்கப்பட்டவர்களது உறவுகள் மத தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் நலன்விரும்பிகள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.