தாமிரபரணி புஷ்கர விழாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

263 0

தாமிரபரணி மகா புஷ்கர விழா 144 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 11-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தக்கட்டங்களில் புனிதநீராடி வருகின்றனர். தாமிரபரணி ஆற்றுக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்ற வண்ணம் உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. வெளியூர்களில் இருந்து நெல்லைக்கு வந்த ரெயில்கள், பஸ்களில் ஏராளமான மக்கள் வந்தனர். இதுதவிர கார், வேன்களிலும் ஏராளமானோர் வந்தனர்.

நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோவில் படித்துறை, மேலநத்தம் அக்னிதீர்த்த கட்டம், சிந்துபூந்துறை சப்ததீர்த்த கட்டம், வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை அருகில் உள்ள ஜடாயு துறை, மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவில் படித்துறை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதுதவிர பலர் ஆற்றில் பரவலாக அனைத்து இடங்களிலும் குளித்தனர். தாமிரபரணி ஆற்றில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது. ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவு மக்கள் வந்திருந்தனர்.

கூட்ட நெரிசல் காரணமாக தாமிரபரணி ஆற்றில் பாதுகாப்பு நடவடிக்கையாக தண்ணீர் திறப்பு அளவு குறைக்கப்பட்டது. தைப்பூச மண்டப படித்துறையில் நேற்று காலை வேத பாராயணம், ஹோமங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பன்னிரு திருமுறை பாராயணம் நடைபெற்றது.

மேலதிருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் உள்ள சீனிவாச தீர்த்த கட்டத்தில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இங்கு பக்தர்கள் புனிதநீராடி சீனிவாச பெருமாள் கோவிலில் தரிசனம் செய்தனர்.

தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தகட்டங்கள் பகுதியில் நேற்று கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பழனியில் இருந்து வந்த முருக பக்தர்கள் குறுக்குத்துறை படித்துறையில் ஆன்மிக புத்தகங்கள், துண்டுபிரசுரங்களை மக்களுக்கு வழங்கினர். போலீசார் அவர்களை தடுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை வந்த நடிகை கஸ்தூரி நேற்று குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் தாமிரபரணி ஆற்றில் மகள் சோபினியுடன் புனிதநீராடினார். பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

நடிகை கஸ்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:- 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மகா புஷ்கர விழாவில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபற்றி எனக்கு தெரியாமல் இருந்தது. டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இங்கு புனித நீராடிய பிறகே தாமிரபரணி மகா புஷ்கர விழா சிறப்பு பற்றி தெரிந்துகொண்டேன்.

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகள் தற்போது ‘மீ டூ’ இயக்கம் மூலம் வெளிவருகிறது. வீட்டுக்குள் பெண்கள் முடங்கிக்கிடந்த காலம் மாறிவிட்டது. பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க ஏற்கனவே சட்டங்கள் உள்ளன. அவை கடுமையாக்கப்பட்டால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். பெண்களுக்கு விரைவில் சமநீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மட்டும் ஒரே நாளில் மொத்தம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 500 பேர் தாமிரபரணி ஆற்றில் புனிதநீராடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment