80,000 ஏக்கர் விவசாய காணிக்கு மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நீர் விநியோகம்

91664 0

இம்முறை சிறுபோகத்தின்போது 80,000 ஏக்கர் விவசாய காணிக்கு மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நீர் கிடைக்கிறது. 

மொரகஹகந்த நீர்த்தேக்கம் விவசாய நடவடிக்கைகளுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பராக்கிரம சமுத்திரம், மின்னேரிய, கிரித்தலை, கவுடுல்ல மற்றும் கந்தளாய் ஆகிய நீர்த்தேக்கங்களினூடாக உலர் வலய விவசாய நிலங்களுக்கு முதன்முறையாக இம்முறை சிறுபோகத்தின்போது குறைவின்றி நீரை பெற்றுக்கொடுக்கும் இலக்கை அடைந்துகொள்ள முடிந்துள்ளது.

ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெரும்போக விவசாயத்திற்கு போதுமான மழைநீர் உலர்வலய பிரதேசங்களுக்கு கிடைத்து வருவதுடன் குறித்த காலப் பகுதியில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மூலம் வளம்பெறும் பிரதேசத்தினூடாக தும்பறை மிட்டியாவத்தைக்கு கிடைக்கும் 800 மில்லியன் கனமீற்றர் நீர் கடந்த காலங்களில் பொலன்னறுவை மற்றும் சோமாவதி பிரதேசங்களுக்கு பாரிய வெள்ள அச்சுறுத்தலை ஏற்படுத்தி கடலைச் சென்றடைந்தது.

மொரகஹகந்த நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டதைத் தொடர்ந்து தும்பறை, மிட்டியாவத்தை பிரதேசத்திற்கு கிடைக்கும் மழைநீரை சேகரித்து சிறுபோகத்தின்போது விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், சோமாவதி பிரதேசத்தில் இதுவரை காலமும் இருந்துவந்த வெள்ள அச்சுறுத்தலும் நிறைவுக்கு வந்துள்ளது. அந்தவகையில் இதுவரையில் அவ்வப்போது மட்டும் நீர்வழங்கப்பட்டு வந்த உலர்வலயத்தை சேர்ந்த 80,000 ஏக்கர் விவசாய காணிகளுக்கு சிறுபோகத்தில் போதுமான அளவு நீரை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது.

மொரகஹகந்த திட்டத்தின் கீழ் அம்பன் கங்கை, மேற்கு எலஹர கால்வாய், வடமேல் கால்வாய் மற்றும் களுகங்கை திட்டம் ஆகிய முக்கிய நான்கு திட்டங்களினூடாக நீரை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அம்பன் கங்கை திட்டம் நிறைவு செய்யப்பட்டு அம்பன் கங்கையினூடாக விவசாய நிலங்களுக்கு நீரை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அம்பன் கங்கைக்கு வழங்கப்படும் நீரின் மூலம் இம்முறை எலஹர பிரதேசத்தில் மட்டும் பயிர் செய்யப்பட்டுள்ள காணியின் அளவு 16,500 ஏக்கர்களாகும்.

மேற்கு எலஹர திட்டம், வடமேல் கால்வாய் திட்டம் மற்றும் களுகங்கை திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், இந்த நான்கு திட்டங்களும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் 150,000 குடும்பங்களை சேர்ந்த 600,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு விவசாயத்தின் சிறந்த அறுவடையை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

தற்போது பராக்கிரம சமுத்திரத்தில் நீர் 116,000 ஏக்கர் அடியும், கிரிதலையில் 10,100 ஏக்கர் அடியும், மின்னேரிய நீர்த்தேக்கத்தில் 74,500 ஏக்கர் அடியுமாக நீர் நிரம்பி காணப்படுகிறது.

மேலும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மூலம் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படும் மின்சாரம் 25 மெகா வோட் என்பதுடன், தற்போது நான்கு மின்சார உற்பத்தி இயந்திரங்களில் மூன்று இயந்திரங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

இது தவிர வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் மொரகஹகந்த திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளதுடன் இதற்கான மேலதிக திட்டங்களின் நிர்மாணப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a comment