சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறப்பது தேவையில்லாதது- துரைமுருகன்

1462 0

சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறப்பது தேவையில்லாதது என்று தி.மு.க. முதன்மை செயலாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் கூறியுள்ளார். 

சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறப்பது பற்றி தி.மு.க. முதன்மை செயலாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் கூறியதாவது:-

ஜெயலலிதாவுக்கு சட்டசபையில் உருவப்படம் திறப்பது தேவையில்லாத ஒன்று. அதற்கு பதிலாக பட்ஜெட்டில் கவனம் செலுத்துவது பற்றி சிந்திக்கலாம்.

சொத்து குவிப்பு வழக் கில் சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்ட கிரிமினல் குற்றவாளி ஜெயலலிதா என்று நாங்கள் மக்களிடம் எடுத்து சொல்வோம்.

ஜெயலலிதா மரணம் சம்பந்தமாக சட்டசபையில் போதுமான அளவுக்கு எங்களை பேச அனுமதிக்கவில்லை. இப்போது அவசர அவசரமாக ஜெயலலிதா படத்தை திறப்பதாக அறிவிப்பு வருகிறது. இதற்கான அழைப்பிதழ் இன்று காலை வரை எங்களுக்கு வரவில்லை.

பிரதமர் மோடியை வரவழைத்து ஜெயலலிதாவின் படத்தை திறக்க எடப்பாடி பழனிசாமி அரசு பல மாதங்களாக முயற்சி செய்தது. ஆனால் மோடி அதை ஏற்கவில்லை. இதனால் அவசர அவசரமாக திடீரென படத்திறப்பு விழா வைத்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதா படம் திறப்பது பற்றி பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்ட போது, ‘இதுபற்றி நான் என்ன கருத்து சொல்வது. பிரதமர் மோடி கலந்து கொள்ளாததற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதுபற்றி பேச நான் சரியான ஆள் இல்லை’ என்று தெரிவித்தார்.

Leave a comment