உள்ளுராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும்! – நிலாந்தன்

24491 0

உள்ளுராட்சிசபைத் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் இரண்டு தரப்பிற்கு சோதனை காத்திருக்கிறது. முதலாவது சிறீலங்கா சுதந்திரக்கட்சி, இரண்டாவது தமிழரசுக்கட்சியும்அதன் கூட்டாளிகளும். கூட்டரசாங்கம் என்பது சுதந்திரக்கட்சியின் பிளவில் இருந்து உருவானதுதான். இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனப்படுவது சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை மேலும் ஆழமாக்கவே உதவும். இது சில சமயங்களில் ஐக்கியதேசியக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புக்களை அதிகப்படுத்திவிடும்.

தேர்தலில்; மகிந்த அணி வென்றாலும், மைத்தரி அணி வென்றாலும் இழப்பு சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்குத்தான். அக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவு மேலும் ஆழமாக்கப்படுமே தவிர குறைக்கப்படாது. இப்படிப் பார்த்தால் ரணில் விக்கிரமசிங்க யு.என்.பியைப் பலப்படுத்தும் நோக்கில் எஸ்.எல்.எவ்.பி.யை தொடர்ந்தும் பிளந்து வைத்திருக்க முயற்சித்திருக்கிறாரா? என்றும் சிந்திக்க வேண்டும். எஸ்.எல்.எவ்.பி. பிளவுண்டிருப்பதனால் தான் ஒரு கூட்டரசாங்கம் உருவாகியது. கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக வரமுடிந்தது. எனவே எஸ்.எல்.எவ்.பி.யைத் தொடர்ந்தும் பிளவுண்ட நிலையில் வைத்திருப்பதற்கு அதன் மூத்த உறுப்பினர் விரும்புவார்களா?

இத்தகையதோர் பின்னணிக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடந்தால் முதலாவது சோதனை; எஸ்.எல்.எவ்.பி.க்;குத்தான். இரண்டாவது சோதனை தமிழரசுக்கட்சிக்காகும். தமிழரசுக்கட்சியின் பங்களிப்போடு யாப்புருவாக்கத்திற்கான ஓர் இடைக்கால அறிக்கை வந்திருக்கின்றது. இடைக்கால அறிக்கையில் முன்மொழியப்படும் ஒரு தீர்வுத் திட்டத்திற்காக தமிழரசுக்கட்சியானது ஆகக்கூடிய பட்சம் விட்டுக் கொடுத்திருப்பதாக டிலான் பெரேரா போன்ற அரசாங்கப் பிரமுகர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ஒரு தீர்வை உருவாக்குவதற்காக தமிழரசுக்கட்சியும் அதன் கூட்டாளிகளும் விட்டுக்கொடுத்தது சரியா? பிழையா? என்பதை தமிழ் மக்கள் முடிவெடுக்கும் ஒரு களமாக உள்ளூராட்சிசபைத் தேர்தல்கள் அமையக்கூடும். வந்திருப்பது இடைக்கால அறிக்கைதான். அது இறுதியாக்கப்படும் வரையிலும் அதைக்குறித்து இறுதி முடிவுகளை எடுப்பது கடினம்தான். ஆனால் இடைக்கால அறிக்கையில் இருப்பதை விடவும் அதிகமாக எதையும் இறுதியறிக்கையில் எதிர்பார்க்க முடியாது என்பதே இலங்கைத் தீவின் வரலாற்று அனுபவமாகும். எனவே இடைக்கால அறிக்கையில் மும்மொழியப்பட்டவைகளின் பிரகாரம் தமிழரசுக்கட்சியும் அதன் சிறிய கூட்டாளிகளும் அதிகபட்சம் விட்டுக்கொடுத்திருப்பது தெரியவருகிறது. இவ்வாறு விட்டுக்கொடுத்து ஒரு தீர்வைப் பெறுவது சரியா? பிழையா? என்ற தீர்ப்பை தமிழ் மக்கள் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வழங்கக்கூடும்.

இந்த இடத்தில் ஒரு விவாதத்தைத் கவனிக்க வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனப்படுவது ஊரக மட்டத்திலானது. ஊரகமட்ட அரசியலுக்கானது. அதில் தேசிய அளவிலான விவகாரங்களை விவாதிக்கலாமா? அல்லது விவாதிக்கப்படுமா? என்பதே அதுவாகும். ஆனால் இனப்பிரச்சினை கூர்மையடைந்த பின்னரான எல்லாத் தேர்தல்களின் போதும் இன அடையாளமே வெற்றிகளைத் தீர்மானித்தது. இனமான அலையே வெற்றிகளைத் தீர்மானித்தது. உள்ளூர் அதிகாரங்களைக் குறித்து விவாதிக்கப்பட்ட தேர்தல் களங்கள் மிகக்குறைவு. தன்னாட்சி அதிகாரத்திற்காக போராடும் ஒரு மக்கள் குழாம் எந்த ஒரு சிறு தேர்தலையும் தனது தன்னாட்சி அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கான ஒரு களமாகவே பயன்படுத்தும். இப்படிப் பார்த்தால் இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கும் ஒரு பினனணியில் அது பற்றிய விவாதக் களமாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் களம் மாறக்கூடிய வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இடைக்கால அறிக்கையை உருவாக்க உழைத்த தமிழரசுக்கட்சிக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் எதிராக ஒரு மாற்று அணி உருத்திரளத் தொடங்கியிருக்கும் ஒரு பின்னணியில் எப்படிப்பட்ட ஒரு மோதல் களமாக அது அமையும் என்பதனை ஓரளவிற்கு ஊகிக்கலாம்.

கோட்பாட்டு அடிப்படையில் கூட உள்ளூராட்சி தேர்தல்களம் எனப்படுவது தனிய உள்ளூராட்சி அதிகாரத்தோடு மட்டும் தொடர்புடையது அல்ல அது தமிழ்மக்களின் தன்னாட்சி அதிகாரத்தோடும் தொடர்புடையதுதான். அதாவது இனப்பிரச்சினையிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒன்றுதான். உள்ளூராட்சி அதிகாரம் எனப்படுவது இன்று உலகம் முழுவதும் அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் நடைமுறையாகும். கீழிருந்து மேல் நோக்கி கட்டியெழுப்பப்படும் ஒரு ஜனநாயகக் கட்டமைப்பின் அடிச்சட்டமாக அது பார்க்கப்படுகிறது. உள்ளூராட்சி அதிகாரங்களைப் பலப்படுத்துவதன் மூலமாகவே பங்கேற்பு ஜனநாயகத்தை பலமாகக் கட்டியெழுப்பலாம் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். வளரும் நாடுகளுக்கு உதவ முன்வரும் கொடையாளி நாடுகளும், கொடையாளி நிறுவனங்களும் உள்ளூராட்சி அமைப்புக்களோடு நேரடியாக தொடர்பு கொள்ள விளைவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இடைக்கால அறிக்கையிலும் அதிகாரப்பகிர்விற்குரிய மூன்று மட்டங்களில் ஆகக்கீழ்மட்டமாக உள்ளூராட்சி சபைகளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகையதோர் பின்னணியில் உள்ளூராட்சி அதிகாரம் எனப்படுவது தொட்டிலில் தொடங்கி சுடுகாடு வரையிலுமானது என்று ஒரு முன்னாள் பட்டினசபைத் தவிசாளர் சொன்னார். ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அதன் தாய், சேய் நலன்களிலிருந்து தொடங்கி அது முதுமையடைந்து இறக்கும் பொழுது கொண்டு செல்லப்படும் சுடுகாட்டை நிர்வகிப்பது வரை எல்லாமே உள்ளூராட்சி அதிகாரங்களுக்கு உட்பட்டவைதான்.

ஆனால் பிரயோக யதார்த்தம் எதுவெனில் உள்ளூராட்சி சபைகள் அவற்றின் அதிகாரங்களை முழுமையாகப் பிரயோகிப்பதில் சில அடிப்படையான வரையறைகள் உண்டு என்பதுதான். தேசியப் பதுகாப்பு என்ற போர்வையிலும் கடலோரப் பாதுகாப்பு, வனப்பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படைகளிலும் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் குறைக்கப்படுகிறது என்று முன்னாள் தவிசாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். உள்ளூர் வளங்களின் மீதான மக்கள் அதிகாரமே அதன் மெய்யான் பொருளின் உள்ளூராட்சி அதிகாரமாகும். நிலம், கடல், வனம், குளம் முதலாக கனிம வளங்களும் உட்பட உள்ளூர் வளங்களைக் கொண்டு தன்னிறைவான கிராமங்களைக் கட்டியெழுப்புவதே உள்ளூராட்சி மன்றங்களின் இலட்சியவாத நோக்கமாகும். ஆனால் நடைமுறையில் உள்ளூராட்சி சபைகள் அவற்றிற்கு என்று குறித்தொதுக்கப்பட்ட வளங்களை அனுபவிப்பதிலும், பிரயோகிப்பதிலும் பின்வரும் தடைகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

1. வெளிப்பார்வைக்கு உள்ளூராட்சி சபைகள் அதிகாரம் மிக்கவைகளாகத் தோன்றினாலும்நடைமுறையல் மத்திய அரசாங்கம்; மையப்படுத்த்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கூடாக அந்த அதிகாரங்களைப் பலவீனப்படுத்துவது.

2. நிர்வாக சேவை அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளை மதிப்பதில்லை அல்லது அவர்களோடு ஒத்துழைப்பதில்லை என்பது.

3. மக்கள் பிரதிநிதிகள் சிலர் தமக்குரிய அதிகாரம் தொடர்பில் விளக்கமின்றியும், பயிற்சியின்றியும், விவேகமின்றியும் காணப்படுவது அல்லது அதிகாரங்களைத் துஷ;பிரயோகம் செய்பவர்களாகக் காணப்படுவது.

4. மத்தி ய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது வாக்கு வங்கிகளைப் பாதுகாப்பதற்காக உள்ளூராட்சி அதிகாரங்களில் தலையிடுவது.

மேற்கண்ட பிரதான தடைகளும் உட்பட ஏனைய உபதடைகள் காரணமாக தமிழ் உள்ளூராட்சி சபைகள் போதியளவு வினைத்திறனோடு இயங்க முடியாதிருப்பதாக சுட்டிக் காட்டப்படுகிறது.அதேசமயம்,உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் கட்சிகள் பொருத்தமான உள்ளூராட்சிக் கொள்கைகளையோ,கொள்கைகளைத் திட்ட வரைபுகளையோ கொண்டிருப்பதில்லை என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். உள்ளூராட்சித் தேர்தல்களின் போது தமது உள்ளூராட்சிக் கொள்கைத்திட்ட வரைபு எதுவென்பதை இதுவரையிலும் எத்தனை கட்சிகள் முன்வைத்திருக்கின்றன?. இனிவரக்கூடிய தேர்தல்களிலும் அவ்வாறான கொள்கைத்திட்ட வரைபு முன்வைக்கப்படுமா? தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை உள்ளூராட்சி அதிகாரம் எனப்படுவது தன்னாட்சி அதிகாரத்தின் ஒரு பகுதிதான். எனவே உள்ளூராட்சிக் கொள்கைத்திட்ட ம் எனப்படுவதும் தேசியக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும். தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து கிராமங்களை எப்படிக் கட்டியெழுப்புவது என்று சிந்தித்து அத்திட்ட வரைபு உருவாக்கப்பட வேண்டும். தேசிய விடுதலையென்பது சமூக விடுதலையையும் உள்ளடக்கியதொன்று என்ற மூலக்கொள்கையிலிருந்து அது உருவாக்கப்பட வேண்டும். கிராமங்களில் காணப்படும் சாதி, மத, பால் அசமத்துவங்களைக்; கவனத்திலெடுத்து பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்

தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் திரளின் கூட்டுப் பிரக்ஞையாகும். ஒரு மக்களை திரளாக்கும் எல்லாவற்றிலும் தேசியத்தன்மை உண்டு. ஒரு மக்கள் கூட்டம் திரளாவதை தடுக்கும் எல்லாக் காரணிகளும் தேசியத்திற்கு எதிரானவை. எனவே ஒரு மக்கள் கூட்டம் உருகிப் பிணைந்த ஒரு திரளாக திரட்டப்படுவதற்கு தடையாக இருக்கக் கூடிய சாதி, மத, பால் அசமத்துவங்கள் அனைத்தும் களையப்பட்டு ஜனநாயக அடிச்சட்டத்தின் மீது அனைவரும் சமமாக ஏற்றுக்கொள்ளப்படும் பொழுதே அது முற்போக்கான தேசியமாக மேலெழுகின்றது. எனவே உள்ளூராட்சி கொள்கைகளை வகுக்கும் பொழுது அது மேற்சொன்ன சமூக விடுதலையையும் உள்ளடக்கிய தேசிய விடுதலை என்ற கொள்கை அடிப்படையில் கிராமங்களைக் கட்டியெழுப்பும் ஒன்றாக உருவாக்கப்பட வேண்டும்.அப்படி உருவாக்கப்படுமிடத்து தற்பொழுது வலிகாமத்தில் மயானமா? மக்கள் குடியிருப்பா? என்று கேட்டு போராடும் நிலமைகள் தவிர்க்கப்படும். அது மட்டுமல்ல. இப்பொழுது வேட்பாளரைத் தேடி வலை வீசும் நிலமையும் தவிர்க்கப்படும்.

இனிவரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் பெண்களுக்கு 25வீதம் ஒதுக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குரூரமான யதார்த்தம் எதுவெனில் பெரும்பாலான கட்சிகளிடம் கிராமமட்டத் தலைவிகள் இல்லை என்பதே. கிடைக்கப்பெறும் செய்திகளின்படி அரங்கிலுள்ள அரசியல்வாதிகள் சிலர் தமது மனைவிமார்களை களத்தில் இறக்கப்போவதாகக் கூறப்படுகிறது. ஓய்வூதியர்களின் அரசியலைப் போல இனி திருமதி பிரமுகர்களின் அரசியலும் உருவாகப் போகிறதா?

தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து கிராமங்களைக் கட்டியெழுப்புவது என்பது ஒரு தேர்தல் உத்தியல்ல. அது கீழிருந்து மேல் நோக்கி தேசிய உணர்வுகளையும், ஜனநாயகத்தையும், உள்ளூர் தலைமைத்துவத்தையும் கட்டியெழுப்பும் நோக்கிலான பங்கேற்பு ஜனநாயகப் பொறிமுறையாகும். ஒரு தேர்தலை முன்வைத்து உடனடிக்கு சுடுகுது மடியைப் பிடி என்று அதைச் செய்ய முடியாது. அதை நீண்டகால நோக்கில் திட்டமிட்டு படிப்படியாக பண்படுத்திப் பயிர் செய்ய வேண்டும்.

ஆனால் தற்பொழுது நடந்துகொண்டிருப்பது என்ன? அரசாங்கம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அறிவித்ததன் பின்னணயில் புதிய தேர்தல் கூட்டுக்களுக்காக காய்கள் நகர்த்தப்படுகின்றன. ஒரு மாற்று அணிக்கான தேவை பற்றி எப்பொழுதோ உணரப்பட்டு விட்டது. விக்னேஸ்வரனின் வருகைக்குப் பின் அவ்வெதிர்பார்ப்புக்கள் மேலும் அதிகரித்தன. ஆனால் சில மாதங்களுக்கு முன் அவர் ஒரு மாற்று அணிக்கு தலைமை தாங்க மாட்டார் என்பதனை வெளிப்படுத்திய பின் அவ் எதிர்பார்ப்புக்களில் ஒரு வித தொய்வு ஏற்பட்டது. எனினும் ஒரு மாற்று அணிக்கான சந்திப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வந்தன.

இச்சந்திப்புக்களின் விளைவாகவும் தேர்தல் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பின் பின்னணியிலும் இப்பொழுது தமிழ்ப்பரப்பில் இரண்டு வலிமையான தெரிவுகள் மேலெழுந்துள்ளன. முதலாவது தமிழ்மக்கள் பேரவையால் பின்னிருந்து ஊக்குவிக்கப்படும் ஒரு கூட்டு. இரண்டாவது தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தின் கீழான ஒரு கூட்டு. மக்கள் பேரவை ஒரு கட்சியாக மாறாது என்பது கடந்த கிழமை நடந்த சந்திப்போடு திட்டவட்டமாகத் தெரியவந்துள்ளது. அது போலவே விக்னேஸ்வரனும் தனது பதவிக்காலம் முடியும் வரையிலும் திருப்பகரமாக முடிவுகளை எடுக்கமாட்டார் என்பது பெருமளவிற்கு வெளித்தெரிய வந்து விட்டது. இந் நிலையில் பேரவையின் பின்பலத்தோடு கஜேந்திரகுமாரும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் சிவில் அமைப்புக்களும் ஒன்று திரளக்கூடிய வாய்ப்புக்கள் தூக்கலாகத் தெரிகின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியோடு சேர்வதற்கு கஜேந்திரகுமார் அணி தயங்குகிறது. இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குமிடையே இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரைக்குமே உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை

ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்டதும் தமிழ் மக்கள் மனதில் ஆழப்பதிந்ததுமாகிய ஒரு சின்னத்தை முன்வைத்து தமிழரசுக்கட்சியை எதிர்ப்பதா? அல்லது ஜனவசியமிக்க தலைவர்களுக்காகக் காத்திருக்காமலும்,சின்னங்களில் தொங்கிக்கொண்டிராமலும் நீண்ட கால அடிப்படையில் படிப்படியாக ஒரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதா? என்பதே இப்பொழுது மாற்றுத் தரப்பின் முன்னாலுள்ள இருபெரும் கேள்விகளாகும். எனினும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழரசுக்கட்சியும் அதன் சிறிய கூட்டாளிளும் ஒத்துழைத்து உருவாக்கிய இடைக்கால வரைபை முன்வைத்து ஒரு மோதல்க் களத்தை திறக்க வேண்டும் என்பதில் மாற்று அணிக்குள் கருத்து வேறுபாடு இல்லை.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக உள்ளூர்த் தலைமைகளைத் தேடியலையும் ஒரு நிலமையென்பது தமிழ் ஜனநாயகத்தின் கிராமமட்ட வலைப்பின்னல் எவ்வளவு பலவீனமாகக் காணப்படுகிறது என்பதனைக் காட்டுகிறது.கொள்கைவழி நின்று கிராமமட்டத் தலைமைகளை கட்டியெழுப்பும் நோக்கில் நீண்டகாலத் திட்டம் ஒன்று தேவை என்பதைத்தான் தற்போதுள்ள நிலமைகள் காட்டுகின்றன. இது தொடர்பில் ஒரு கூர்மையான அரசியல் அவதானி அண்மையில் எனக்கு ஒரு ஸென்பௌத்தக் கதையைச் சொன்னார் . ஒரு ஸென்பௌத்தத் துறவி தலையில் நிறையப் புத்தகங்களை அடுக்கியபடி முன்பின் தெரியாத ஒரு பாதையினூடாகப் பயணம் செய்ய முற்பட்டார்.

பாதையின் தொடக்கத்தில் அவர் கண்ட ஒரு ஊர்வாசியிடம் இப் பாதையூடாக நான் போய்ச் சேர வேண்டிய இடத்தை அடைவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?

என்று கேட்டார். அதற்கு அந்த ஊர் வாசி சொன்னார் மெதுவாகப் போனால் இன்று பின்னேரம் சென்றடைவீர்கள். விரைவாகப் போனால் நாளை பகல் சென்றடைவீர்கள் என்று. துறவி வேகமாகப் போனார். அடுத்த நாள் காலைதான் உரிய இடத்தை சென்றடைய முடிந்தது. திரும்பி வரும் பொழுது முன்பு சந்தித்த அதே ஊர்வாசியைக் கண்டார். ;ஏன் அப்படிச் சொன்னீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர் சொன்னார்தலையில் புத்தக அடுக்கோடு வேகமாகப் போனால் அடிக்கடி இடறுப்படுவீர்கள். புத்தகங்கள் விழும். அவற்றை எடுத்து அடுக்கிக் கொண்டு போக நேரம் அதிகம் எடுக்கும். ஆனால் மெதுவாகப் போனால் மேடு பள்ளங்களை பார்த்து கால்களை நிதானமாக எடுத்து வைப்பீர்கள்;.

புத்தகங்களையும் தலையிலிருந்து விழாமல் பார்த்துக் கொள்வீர்கள். அதனால் தான் அப்படிச் சொன்னேன் ; என்று. இப்பொழுது தமிழ் அரங்கில் ஒரு மாற்று அணிக்கான தேர்தல் கூட்டைக் குறித்து சிந்திக்கும் எல்லாத் தரப்புக்களுக்கும் இக்கதை பொருந்துமா?

Leave a comment