விஷ ஊசி மருந்து உண்மை கண்டறியப்பட வேண்டும் – செல்வரட்னம் சிறிதரன்

656 0

poison-vaccinsமுன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி மருந்து ஏற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் விடயம் இப்போது விவகாரமாகி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இராணுவத்தினரின் பாதுகாப்பில் புனர்வாழ்வுப் பயிற்சி அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கே இவ்வாறு விஷ ஊசி அல்லது இரசாயனம் கலந்த ஊசி மருந்த ஏற்றப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் எழுந்திருக்கின்றன.

இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் படையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டிலேயே புனர்வாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கென வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலுமாக 14 நிலையங்கள் செயற்பட்டு வந்தன.

இந்த புனர்வாழ்வுப் பயிற்சி நிலையங்கள் புனர்வாழ்வு அமைச்சின் கீழ் குறிப்பாக சிறைச்சாலைகள் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் கீழ் செயற்பட்டு வந்தபோதிலும், அவற்றின் முழு நிர்வாகக் கட்டுப்பாடுகள், அந்தப் பயிற்சி நிலையங்களின் நடைமுறைகள் செயற்பாடுகள் என்பவற்றிற்குப் பாதுகாப்பு அமைச்சே பொறுப்பாக இருந்து வந்தது.

சிறைச்சாலைகள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சின் கீழ் முழுமையாக இந்தப் புனர்வாழ்வு நிலையங்கள் செயற்பட்டிருக்குமேயானால், அந்த நிலையங்களின் நிர்வாகக் கடமைகள், அவற்றின் செயற்பாடுகள் என்பவற்றிற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அல்லது சிவில் அதிகாரிகளே பொறுப்பாக இருந்து செயற்பட்டிருப்பார்கள்.

பாதுகாப்பு அமைச்சின் நிழல் நிர்வாகம்

ஆனால் சிறைச்சாலைகள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் கீழ் புனர்வாழ்வுப் பயிற்சி நிலையம் என்ற பெயர் சூட்டப்பட்டிருந்த போதிலும், அந்த நிலையங்கள் உண்மையிலேயே பாதுகாப்பு அமைச்சின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே செயற்பட்டு வந்தன என்றே கூற வேண்டும்.

பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் விடுதலைப்புலிகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர்கள், விடுதலைப்புலிகளின் தீவிர செயற்பாட்டு ஆதரவாளர்கள் ஆகியோரைத் தடுத்து வைப்பதற்காக பெயரளவில் சிறைச்சாலைகள், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் கீழ் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், உண்மையில் அவைகள் பாதுகாப்பு அமைச்சின் நிழல் உத்தரவின் கீழ் அமைக்கப்பட்ட தடுப்பு முகாம்களாகவே இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த முகாம்களின் நிர்வாகம் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் நேரடி பொறுப்பில் இடம்பெற்று வந்தது. இந்த புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் நிறுவகம் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோது, அப்போதைய நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் முதலாவது புனர்வாழ்வு ஆணையாளராக 2 வருடங்கள் 10 மாத காலம் – 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை செயற்பட்டிருந்தார்.

அவரையடுத்து, 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் ஜெனரல் தயா ரட்நாயக்க (இராணுவ தளபதி) புனர்வாழ்வு ஆணையாளராகப் பொறுப்பேற்று 6 மாதங்களாகச் செயற்பட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து இன்று வரையில் மாறி மாறி இராணுவ உயர் அதிகாரிகளே புனர்வாழ்வு ஆணையாளராகப் பணியாற்றி வந்திருக்கின்றனர்.

இந்தப் புனர்வாழ்வு நிறுவகத்தின் முக்கிய நோக்கம் ஆயுத முரண்பாட்டில் வழி தவறிச்சென்ற முன்னாள் ஆயுததாரிகளையும், சிறுவர் போராளிகளையும் நற்பிரஜைகளாக உருவாக்குவதே என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், குறிப்பாக முன்னாள் போராளிகளை மூளை சலவை செய்வதையும், அரசாங்கத்தின் அருமை பெருமைகளை அவர்களிடம் திணிப்பதையுமே இலக்காகக் கொண்டு இந்த நிறுவகம் புனர்வாழ்வுப் பயிற்சி நிலையங்களைச் செயற்படுத்தி வந்ததாக, புனர்வாழ்வு பயிற்சியின் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

புனர்வாழ்வு பயிற்சி முகாம்கள் என கூறப்பட்ட போதிலும், அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, தங்களுடைய மன வலிமையையும், போராட்டச் சிந்தனையையும், நீதி நியாயத்தின்பால் நின்று சிந்திக்கின்ற தன்மையையும் இல்லாமல் செய்யத்தக்க வகையில் அந்த முகாம்களின் செயற்பாடுகள் அமைந்திருந்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

உண்மையிலேயே அவைகள் புனர்வாழ்வுப் பயிற்சி நிலையங்களாக அல்லாமல், உடல் உளரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தத்தக்க கடுமையான வேலைகள் உள்ளிட்ட செயற்பாடுகளைக் கொண்ட இறுக்கமான தடுப்பு முகாம்களாகவே இருந்தன என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

நாளடைவில் இந்த முகாம்களின் செயற்பாடுகளில் கடுமை குறைந்திருந்தன என்பதை பின்னர் விடுதலையாகி வந்த முன்னாள் போராளிகள் ஒப்புக்கொண்ட போதிலும், இந்த முகாம்கள் புனர்வாழ்வுப் பயிற்சிக்குரிய முகாம்களாக முழுமையான அளவில் செயற்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

உண்மையான புனர்வாழ்வுப் பயற்சி இங்கு வழங்கப்பட்டிருக்குமேயானால், குடும்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அனைவரும் சமூகத்தில் நல்ல நிலையில் இருந்திருப்பார்கள். ஆனால் நிலைமை அவ்வாறில்லாமல், தலைகீழாகவே இருக்கின்றது என்றும் அவர்கள் கவலையோடு தெரிவிக்கின்றார்கள்.

முன்னைய ஆட்சியில் சிறைச்சாலைகள், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக இருந்த சந்திரசிறி கஜதீர இந்த நிலையங்களைத் தடுப்பு முகாம்கள் என ஒருபோதும் அழைக்கக்கூடாது, அவற்றை புனர்வாழ்வு நிலையங்கள் என்றே அழைக்க வேண்டும் என்று ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல்: முழுக்க முழுக்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், அவர்களுடைய இறுக்கமான பாதுகாப்பு மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு உட்பட்டிருந்த ஏழு பிரிவுகளை உள்ளடக்கியதாக இறுதி யுத்தத்தின்போது வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களைத் தங்க வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மனிக்பாம் இடைத் தங்கல் அகதி முகாம் தொகுதியையும்கூட புனர்வாழ்வு கிராமங்கள் என்றே அழைக்க வேண்டும் என்று அப்போதைய அரசாங்கம் வலியுறுத்தியிருந்தமையும் இங்கு நினைவுகூரத்தக்கது.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் புனர்வாழ்வுப் பயிற்சியின்போது, தங்களுக்கு விஷம் கலந்த அல்லது இரசாயனம் கலந்த ஊசி மருந்து ஏற்றப்பட்டது என்ற முறைப்பாடு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களிடம் இருந்து வெளிவந்திருக்கின்றது.

உண்மையில் ஊசி ஏற்றப்பட்டதா?

மனித உரிமைகள் மீறல் தொடர்பில் பொறுப்பு கூறும் வகையில் நான்கு அம்சங்களைக் கொண்ட நல்லிணக்கப் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் ஓர் அங்கமாக பொது மக்கள் மத்தியில் இருந்து ஆலோசனைகளைப் பெறுவதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் முன்னால் கருத்து வெளியிட்ட முன்னாள் போராளி ஒருவர் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் இந்த விஷ ஊசி ஏற்றப்பட்ட விடயத்தை ஒரு முறைப்பாடாக முன்வைத்திருந்தார்.

பல விடயங்களை அவர் தனது சமர்ப்பணத்தின்போது முன்வைத்து பல கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.

விஷ ஊசி தொடர்பாகக் கூறுகையில் தடுப்பில் இருந்த போது, தங்களுக்குத் தடுப்பு ஊசி மருந்து ஏற்றப்படுவதாகக்கூறி ஊசி போடப்பட்டதாகவும், அன்றைய தினம் மாலை ஒரு போராளி சந்தேகத்திற்கு உரிய வகையில் மரணமடைந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த போது 50 கிலோ எடையைத் தூக்கிக்கொண்டு ஓடக்கூடிய வல்லமையுடன் கூடிய ஆரோக்கிய நிலையில் இருந்ததாகவும், புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் குடும்பத்துடன் இணைந்த பின்னர், இப்போது 10 கிலோ எடையுடைய பொருளைக்கூட தன்னால் தூக்க முடியாதிருப்பதாகவும், இதற்கு மெதுவாகப் பாதிப்பை ஏற்படுத்தத் தக்க வகையில் தடுப்பு முகாமில் தனக்கு போடப்பட்ட ஊசியில் செலுத்தப்பட்ட மருந்தில் விஷம் அல்லது இரசாயனம் கலந்திருக்க வேண்டும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டு, தனக்கும், தன்னைப் போன்றவர்களுக்கும் முறையான வைத்திய பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த ஊசி விவகாரம் வெளிச்சத்திற்கு வருவதற்கு முன்பே, முன்னாள் போராளிகளான ஆண்களும் பெண்களும் மர்மமான முறையில் நோய்வாய்ப்பட்டும், புற்றுநோய்க்கு ஆளாகியும் பரவலாக மரணமடைந்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, முன்னாள் போராளிகளுக்கு ஏதோ நடந்திருக்கின்றது, அதன் காரணமாகவே இந்த மரணங்கள் சம்பவித்திருக்கின்றன என்று பலரும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இந்த சந்தேகத்தை உறுதி செய்யும் வகையிலேயே விஷ ஊசி போடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடு அமைந்திருக்கின்றது. சுமார் 105 பேர் அல்லது 107 பேர் வரையில் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் அல்லது அநேகமானவர்கள் புற்று நோய் எற்பட்டதன் பின்பே மரணமாகினர் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதற்கு முழு முதல் ஆதாரமாக விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல் துறைத் தலைவியாக இருந்த தமிழினி (சுப்பிரமணியம் சிவகாமி) வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி நிலையத்தில் இறுதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததன் பின்னர் 2013 ஆம் ஆண்டு குடும்பத்துடன் இணைக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்பே அவர் நோய்வாய்ப்பட்டு அவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தது என்பது கண்டறியப்பட்டிருந்தது. மகரகம புற்று நோய் மருத்துவ மனையில் கடந்த வருடம் மே மாதம் 15 ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி மரணமடைந்தார்.

புற்றுநோய் காரணமாக மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படும் ஏனைய முன்னாள் போராளிகளின் மரணங்கள் தொடர்பான தகவல்கள், மரண விசாரணைளின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்ட வகையில் அதிகாரபூர்வமாக வெளிவந்திருப்பதாகத் தெரியவில்லை.

இருப்பினும் முன்னாள் போராளிகள் புற்றுநோய்க்கு ஆளாகியது எப்படி என்ற கேள்வி நியாயமானதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் எழுந்திருக்கின்றது.

இறுக்கமான கட்டமைப்புக்களையும் ஒழுக்கவிதிமுறைகளையும் கொண்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் புகைபிடித்ததில்லை. அவர்கள் மது அருந்துவதில்லை.

மது அருந்துதல், புகை பிடித்தல் மற்றும் அளவுக்கதிகமாக வெற்றிலை போடுதல் போன்ற காரணங்களினாலேயே புற்றுநோய் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், விடுதலைப்புலிகளின் முகாம்களில் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்தவர்களும், வளர்க்கப்பட்டவர்களுமான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு எவ்வாறு புற்றுநோய் ஏற்பட்டது? என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்துடன் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அனைவரும் முறையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இந்த விஷ ஊசி தொடர்பான உண்மை நிலைமை கண்டறியப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

அரச தரப்பின் முரண்பட்ட உணர்வு வெளிப்பாடு

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான முக்கியஸ்தர்கள், இராணுவ புலனாய்வு பிரிவினரால் அடையாளம் காட்டப்படாத இடங்களில் முதலில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டதன் பின்பே, புனர்வாழ்வு முகாம்களுக்கு அல்லது புனர்வாழ்வுப் பயிற்சி முகாம்களுக்கு மாற்றப்பட்டார்கள்.

பலர், புலனாய்வு பிரிவினரின் முதற்கட்ட விசாரணைகளுக்குப் பின்னர், காலியில் உள்ள பூஸா முகாம் அல்லது வெலிக்கடை போன்ற சிறைச்சாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

இன்னும் பலர் பொலன்னறுவையில் அமைந்திருந்த வெலிக்கந்த தடுப்பு முகாமுக்கும் ஏனைய இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

வெலிக்கந்த முகாம் மிகவும் கடுமையான கண்காணிப்பு மற்றும் இறுக்கமான நடைமுறைகளைக் கொண்ட இடமாக வர்ணிக்கப்பட்டிருந்தது.

இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு கடுமையான வேலைகள் வழங்கப்பட்டிருந்ததாகவும். பல்வேறு வழிமுறைகளில் அவர்கள் கடுமையாக நடத்தப்பட்டதாகவும் அந்த முகாமில் இருந்து பின்னர் வேறு புனர்வாழ்வுப் பயற்சி நிலையங்களின் ஊடாக விடுதலை செய்யப்பட்டிருந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

எனவே, இந்த விஷ ஊசி அல்லது இரசாயனம் கலந்த ஊசி என்பது எங்கு வைத்து ஏற்றப்பட்டது, யார் யாருக்கு ஏற்றப்பட்டது, என்பது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகியிருக்கின்றது.

இவ்வாறு ஊசிகள் எதுவும் ஏற்றப்படவில்லை என இராணுவமும், அரசாங்கமும் மறுத்திருக்கின்றன.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் இது குறித்த கவலை வெளியிட்டிருக்கின்றார்.

இருந்த போதிலும், பாதுகாப்புத் தரப்பில் இருந்து இதுகுறித்து புனர்வாழ்வு அமைச்சே பதிலளிக்க வேண்டும் என்ற வகையில் கருத்து வெளியிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.

அதேநேரம், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்னாள் போராளிகள் சந்தேகத்திற்கு உரிய வகையில் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர்களை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதற்கும், அவர்கள் உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களைப் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்புதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கின்றார்.

அத்தகைய மருத்துவ பரிசோதனைகளை உள்ளுரிலேயே நடத்த முடியும் என தெரிவித்துள்ள அவர், அவசியம் ஏற்படுமாயின் சர்வதேச தரத்திலான மருத்துவ பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதற்கான பிரேரணை ஒன்றை நிறைவேற்றியுள்ள வடமாகாண சபை புற்றுநோய் காரணமாக அல்லது சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்த முன்னாள் போராளிகளின் விபரங்களைத் திரட்டுவதற்கு வடமாகாண சுகாதார அமைச்சரின் ஊடாக நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

அதேநேரம் இந்த விடயம் தொடர்பான விரிவான அறிக்கையொன்றை அனுப்புமாறு சுகாதார அமைச்சு வடமாகாண சபையைக் கோரியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது.

ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள கருத்து

அரசாங்க தரப்பில் இருந்து மறுதலித்தும் அதேவேளை தடுப்பு முகாம்களில் ஏதோ நடைபெற்றிருக்கின்றது அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும் என்ற வகையில் உடன்பட்ட ரீதியிலான சமிக்ஞைகள் கலந்த உணர்வுகள் வெளிப்பட்டிருக்கின்ற நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறப்பினர் டாக்டர் சிவமோகன், அவ்வாறு விஷ ஊசி அல்லது இரசாயனம் கலந்த ஊசி ஏற்றப்பட்டிருக்க முடியாது என்ற வகையில் கருத்து வெளியிட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தைத் தடுப்பதற்கும் அதனை நசுக்கி அழிப்பதற்குமான நடவடிக்கைகள் பலவற்றை முன்னெடுத்திருந்தன.

அவற்றில் மிக மிக முக்கியமானதாக கிராம மட்டங்களில்; உள்ள மக்கள் மத்தியிலான தலைமைகளை இல்லாமல் செய்வதற்கும், துடிப்பான சமூகச் செயற்பாடுகளில் முன்னணி வகித்த இளைஞர் யுவதிகளை செயலற்றவர்களாக ஆக்குவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கன.

இதனால்தான், சமூக முக்கியஸ்தர்கள் முதலில் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் இளைஞர்கள் காரண காரியங்களின்றியும் சந்தேகத்தின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்டார்கள். கடத்திச் செல்லப்பட்டார்கள்.

அத்துடன் எண்பதுகளில் நடத்தப்பட்ட இராணுவ சுற்றி வளைப்புக்களின் போது வயது மற்றும் திடகாத்திரமான தோற்றமுடைய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொண்டு சென்ற பின்னர் மறுநாள் அல்லது அடுத்தடுத்த நாட்களில் வீதி நெடுகிலும் சுட்டுத்தள்ளப்பட்டிருந்தார்கள்.

இதன் தொடர்ச்சியாகவே, விடுதலைப்புலிகள் ஆயுத பலத்துடன் மூர்க்கமாக இராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த இளைஞர் யுவதிகள் சந்தேகத்தின் பேரில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவங்களும் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

இதன் பின்னர் அவர்கள் காணாமல் போயிருக்கின்றார்கள். அவ்வாறு காணாமல் போனவர்கள் தொடர்பில்தானே இப்போதும் காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பப்படுகின்றது. போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன?

தமிழ் சமூகத்தின் ஆன்மாவாகத் திகழும் இளைஞர் யுவதிகளை செயலற்றவர்களாக்க வேண்டும் என்ற இனவாத அரசியல் மனோபாவம் கொண்ட இராணுவத்தினரே விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி பெற்றிருந்தனர்.

அந்த வெற்றிவாதத்தை அசைக்க முடியாத அரசியல் கொள்கையாக உருவேற்றப்பட்டிருந்த இராணுவத்தினரே தங்களிடம் சரணடைந்திருந்த விடுதலைப்புலிகளை புனர்வாழ்வுப் பயிற்சி முகாம்களில் பராமரித்திருந்தனர் என்ற கசப்பான உண்மையை எவரும் மறந்துவிட முடியாது.

அந்த இராணுவ கட்டமைப்பே விடுதலைப்புலிகளின் புனர்வாழ்வுப் பயிற்சிக்கான நெறிமுறைகளை வகுத்திருந்தது என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

எனவே இத்தகைய பின்னணியில் புனர்வாழ்வுப் பயிற்சி நிலையங்களிலோ அல்லது இராணுவத்தின் தடுப்பு முகாம்களிலோ தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு ஏதேனும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் இயல்பாகவே எழும் என்பதைப் புறந்தள்ளிவிட முடியாது.

ஆயினும் இப்போது அங்கு ஏதோ நடந்திருக்கின்றது என்ற சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது. அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும்.

இதுவும் அரசாங்கம் வலியுறுத்தி வருகின்ற நல்லிணக்கத்திற்கு மிக மிக அவசியமான ஒன்றாகவும், அதேவேளை, மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச செயற்பாடுகளுக்குப் பொறுப்பு கூறுகின்ற நடவடிக்கையின் முக்கிய அம்சமாகவும் அமைந்திருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.