உண்மையில் இது காணாமல் போனோருக்கான அலுவலகமா?

396 0

DSC_0059-670x448ஸ்ரீலங்கா அரசு மற்றும் அரச படைகளினால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தின்போது காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்து இல்லாமல் செய்யப்பட்டவர்களை கண்டறிய அவ் அரசு காணாமல் போனோர் என்று ஒரு அலுவலகம் திறப்பதற்கான சட்ட மூலத்தை அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த மாபெரும் சாதனைக்காக ஸ்ரீலங்கா அரசுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழ் ஈழ மக்களை தன் பிரஜைகள் என்று கூறிக்கொள்ளும் சிங்கள அரசு அவர்களை இனப்படுகொலை செய்து அவர்களை காணாமல் போகச் செய்தது. இப்போது தானே காணாமல் போகச் செய்தவர்களுக்காக தானே அலுவலகம் அமைப்பதையே இந்த உலகம் ஒரு புறம் பாராட்ட சிங்கள அரசும் தன்னை தானே பாராட்டிக்கொள்கிறது. நிச்சயமாக நல்ல சாதனை. நல்ல முன்னேற்றம். மனித உரிமை குறித்த மாபெரும் சாதனை. இனப்பிரச்சினையில் பெரிய திருப்பம். இப்படியெல்லாம் சிங்கள அரசு சார்பான ஊடங்கள் சித்திரிக்கத் தொடங்கிவிட்டன.

உண்மையில் இது காணாமல் போனோருக்கான அலுவலகமா? இது காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான உண்மையை அறிவிக்கும் அலுவலகமாக இருந்திருக்க வேண்டும். நீதியை அறிவிக்கும் அலுவலகமாக இருந்திருக்க வேண்டும். போர் முடிவடைந்து இன்றைக்கு ஏழு வருடங்களாகிவிட்டன. மகிந்த ராஜபக்ச அரசு இரண்டு ஆணைக்குழுக்களை அமைத்தது. மக்களும் அதில் கலந்துகொண்டு கண்ணீர் விட்டுக் கதறி தமக்கு நடந்த அநீதிகளையும் காணாமல் போகச் செய்யப்பட்டமை குறித்தும் பேசினர்.

மகிந்த ராஜபக்ச உலகை ஏமாற்ற அமைத்த காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு மைத்திரி – ரணில் ஆட்சியிலும் சாட்சியங்களை முன்னெடுத்தது. பலமுறை மீண்டும் மீண்டும் அமரை்வுகளை நடத்தி சாட்சியங்களைப் பதிவு செய்தது. போர் முடிந்து ஏழு வருடங்களாக ஸ்ரீலங்கை ஆண்ட இரு அரசுகளும் காணாமல் போனோர் விடயத்தில் கண்டுபிடிக்காததை, இரு அரசினதும் ஆணைக்குழுக்கள் கண்டுபிடிக்காததை இனியும் கண்டு பிடிப்பார்களா? இல்லை, மீண்டும் எங்கள் சனங்களை கதற விட்டு கதறவிட்டு கண்ணீர் சிந்தி அழ வைத்தே கொல்லப்போகிறார்களா?

உண்மையில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? அந்தக் குற்றங்கள் என்ன வகைப்பட்டன என்பது சிங்கள அரசுக்குத் தெரியும். ஒரு இனம் திட்டமிட்டுக் கொல்லப்படுவதும் காணாமல் போகச் செய்யப்படும் இன அழிப்பு சார்ந்ததே. இது இனப்படுகொலையின் இன்னொரு வடிவம். எனவே இந்தக் குற்றங்களை குறித்து சர்வதேச விசாரணையே எமக்குத் தேவை. அதனால் சர்வதேச விசாரணையை முறியடிக்க காணாமல் போனோர் அலுவலகம் என்று ஒன்றை அமைத்து சிங்கள அரசு தமிழ் ஈழ மக்களை ஏமாற்றுகிறது.

எங்கள் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் மீண்டும் மீண்டும் அழ வைத்து கொல்லப்படுகிறார்கள். காணாமல் போகச் செய்யப்பட்ட விவகாரத்தை போரி கொல்லப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு அடுத்தது. எனிலும் இன்று தேடிக் கொண்டிருக்கும் இந்த மக்களின் அலைச்சலை ஸ்ரீலங்க அரசு வைத்து அரசியல் செய்கிறது. பேக்காட்டு வித்தை காட்டுகிறது. இந்த ஏமாற்று எதுவரைத் தொடரப்போகிறது?

தென்னிலங்கையில் மகிந்தவைப் பொறுத்தவரையில் தமிழ் ஈழ மக்களை அழிப்பதற்கான நிலையம் ஒன்றை மைத்திரி – ரணில் அரசு அமைத்தால் அதனையும் எதிர்ப்பார்கள். ஏனெனில் அது அவர்களின் கட்சிப் பிரச்சினை. அப்படித்தான் இப்போது காணாமல் போனோர் அலுவலகத்தையும் எதிர்க்கிறார்கள். இதனை கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்சவே அறிமுகப்படுத்தினார். இத்தகைய அலுவலகங்களை அமைத்து மக்களை ஏமாற்றுவதில் ராஜபக்சவை இந்த அரசு விஞ்சுகிறது.

சிங்கள இனப்படுகொலை அரசு தன்னுடைய இனப்படுகொலை நடவடிக்கைகளை கறை படிந்த பக்கங்களை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளை மீள அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழ் ஈழ மண்ணில் மேற்கொள்ளும், இன நில அழிப்புக்களை கைவிடவேண்டும். காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் வெளிப்படையாக அறிவிப்பதுடன், அதற்கான நீதியை உடனடியாக வழங்கவேண்டும்.காலத்தை இழுத்தடிக்கக்கூடாது. காலம் தாழ்த்திய நீதி – அநீதி.

தமிழவன்