தமிழரின் கடல்களை மட்டுமல்ல நிலங்களையும் ஆக்கிரமிக்கும் கடற்படை

405 0

SLNS_GOTABHAYAவட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் நிரந்தரமாகக் கையகப்படுத்தப்படத் திட்டமிடப்பட்ட நிலப்பகுதியை அளவீடு செய்து அவற்றின் எல்லைகளைக் குறிப்பதற்காகச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் கடந்த வாரம், கிராம மக்களால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நில அளவையை மேற்கொண்டு எல்லைகளைக் குறிப்பதன் மூலம் சிறிலங்கா கடற்படையினர் 617 ஏக்கர் நிலப்பகுதியையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான இறுதி முயற்சியில் வெற்றி பெற்றிருப்பார்கள். இதில் அரைவாசி நிலப்பகுதி பொதுமக்களுக்குச் சொந்தமானதாகும்.

இதனால் தமது சொந்த நிலங்களை சிறிலங்காக் கடற்படையினர் தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான இறுதிமுயற்சியாக நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்த போது அதனை எதிர்த்து முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். தமது நிலங்களில் தம்மை மீள்குடியேற்ற வேண்டும் எனவும் மற்றும் விவசாயத்தில் ஈடுபடுவதற்கும் அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி இக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக 617 ஏக்கர் நிலப்பகுதி கையகப்படுத்தப்படவுள்ளது என கிராம மக்களுக்கு அறியப்படுத்துமாறு முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவகருக்கு சிறிலங்கா அரசாங்கத்தின் நிலஅளவையாளர் பி.நவநீதனால் கையொப்பமிடப்பட்ட அறிவித்தல் கடிதம் ஒன்று இவ்வாரத்தின் ஆரம்பத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான நில அளவைச் செயற்பாடுகள் புதன்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் இக்காணிகள் தமக்குச் சொந்தமானது என உரிமை கோரும் எவரும் அதற்கான உறுதி அல்லது காணி அனுமதிப் பத்திரங்களை உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வட்டுவாகல் பாலத்திற்கு வடக்கில் அமைந்துள்ள இந்த நிலப்பகுதியானது இறுதிக்கட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது கிராம மக்களால் கைவிடப்பட்டிருந்தது. இறுதிக்கட்ட யுத்தத்தைத் தொடர்ந்து தமக்குச் சொந்தமான காணிகளை சிறிலங்கா கடற்படையினர் கையகப்படுத்தி அதில் “SLNS கோத்தபாய” எனப் பொதுவாக அறியப்படும் கடற்படை முகாமை அமைத்ததாக நில உரிமையாளர்கள் குற்றம்சுமத்தினர்.

இந்த நிலங்கள் தமக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தி 50 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிலஅளவை அதிகாரிகளிடம் முறைப்பாட்டு மனுவொன்றைக் கையளித்ததுடன், தமது நிலங்களை மீளவும் தம்மிடம் கையளிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். சிறிலங்கா அரசாங்கமானது தமக்கு இழப்பீட்டை வழங்குவதையும் இந்த நிலங்களை சிறிலங்கா கடற்படையினர் நிரந்தரமாகக் கையகப்படுத்துவதற்கான எவ்வித நகர்வையும் தாம் எதிர்ப்போம் என நில அளவை அதிகாரிகளிடம் காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

617 ஏக்கர் நிலப்பரப்பில் 379 ஏக்கர் நிலப்பரப்பானது தனியாருக்குச் சொந்தமானது எனவும் எஞ்சிய நிலப்பகுதி அரசிற்குச் சொந்தமானது எனவும் இந்த நிலங்களில் மக்கள் மீள்குடியேறுவதற்கான காணி உறுதிப் பத்திரங்களை கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் வழங்கியிருந்ததாகவும் முல்லைத்தீவு மாவட்ட காணித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘வட்டுவாகலில் உள்ள 670 ஏக்கர் நிலப்பகுதியை சிறிலங்கா கடற்படையினர் கையகப்படுத்தியுள்ளனர். இதில் 617 ஏக்கர் நிலப்பகுதியை சட்டரீதியாக நிரந்தரமாக சுவீகரிப்பதே கடற்படையினரின் தற்போதைய நகர்வாகும்’ என தனது பெயரை வெளியிட விரும்பாத, காணித் திணைக்களத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் ‘சண்டே ரைம்ஸ்’ ஊடகத்திடம் தெரிவித்தார்.

Mullativu-Land (1)

‘போர்க் காலப்பகுதியில் தாம் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்ததால் தமது நிலப் பத்திரங்கள் மற்றும் காணி உறுதிகளை தொலைத்து விட்டதாக மக்கள் எம்மிடம் முறையிட்டுள்ளனர். இவர்கள் கையறுநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த மக்கள் தமது நிலஉரிமையை உறுதிப்படுத்த முடியாத நிலையில் வாழ்கின்றனர்’ என மூத்த அதிகாரி தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கமானது யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து நிலசுவீகரிப்பிற்கு எதிரான எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என கடற்படையால் கையகப்படுத்தப்பட்ட நிலப்பகுதியில் 50 ஏக்கர் காணியின் உரிமையாளரான, கொழும்பிலுள்ள தொழில் அதிபரான வை.சி.சங்க் தெரிவித்தார்.

”பாதுகாப்பு நோக்கங்கள்’ என்ற பெயரில் முல்லைத்தீவில் இவ்வளவு அதிக ஏக்கர் நிலப்பகுதியை கடற்படையினர் சுவீகரிக்க முயற்சிப்பதற்கான நோக்கம் என்ன என்பது எனக்குத் தெரியாது’ என திரு. சங்க் தெரிவித்தார். ‘நீண்ட காலமாக இந்தப் பிரச்சினையை இழுத்தடிப்பதன் மூலம் நில உரிமையாளர்கள் தமது நிலங்களைக் கைவிட்டுவிடுவார்கள் என அதிகாரிகள் நம்புகின்றனர். எனது நிலப்பகுதியில் கால்நடைப் பண்ணை ஒன்றை அமைக்கத் திட்டமிட்டிருந்தேன். இதன்மூலம் உள்ளுர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும். ஆனால் கடற்படையினரின் நில ஆக்கிரமிப்பால் எனது திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை’ என திரு.சங்க் குறிப்பிட்டார்.

Mullativu-Land (2)

நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டை வழங்கும் நோக்குடன் நில எல்லைகளை அளப்பதற்காகவே நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் அனுப்பப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி உறுதிப்படுத்தினார். ‘2009ல் யுத்தம் முடிவடைந்த கையோடு இந்த நிலப்பகுதியானது கடற்படையால் கையகப்படுத்தப்பட்டது. இதற்குப் பின்னர் புதிதாக எந்தவொரு நில சுவீகரிப்பும் இடம்பெறவில்லை. நில உரிமையாளர்களுக்குக் கடற்படையினர் போதியளவு இழப்பீட்டை வழங்குவார்கள். ஆனால் இதனை முள்ளிவாயக்கால் கிராம மக்கள் எதிர்க்கின்றனர். இதில் சில காணிகளுக்கு தென்னிலங்கையைச் சேர்ந்த தனிநபர்களும் உரிமையாளர்களாக உள்ளனர்’ என கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

‘நில அளவை அதிகாரிகள், முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகலைச் சேர்ந்த மக்களால் திருப்பி அனுப்பப்பட்டதாக பிரதேச செயலர் எனக்கு அறியத்தந்தார். இது தொடர்பான முழுமையான அறிக்கையை வழங்குமாறு நான் கேட்டுள்ளேன். அதற்கமைவாக இந்த அறிக்கையை நான் மிக விரைவாக அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பேன்’ என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். காணிகளைப் பலவந்தமாகச் சுவீகரித்தமையை எதிர்த்து நில உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.

‘இந்தப் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான குடும்பங்களின் வாழ்வாதாரம் விவசாயமாகும். இவர்களது விவசாய நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான மாற்று நிலங்கள் வழங்கப்படவில்லை. இதனால் தமது குடும்பச் செலவுகளை ஈடுசெய்வதற்காக சில விவசாயிகள் கூலிவேலைகளுக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என வடக்கு மாகாண சபையின் பிரதித் தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் – S. Rubatheesan
வழிமூலம்    – சண்டே ரைம்ஸ்
மொழியாக்கம் – நித்தியபாரதி