கூர்மை பெறும் முன்னாள் போராளிகள் விவகாரம் – எஸ்.என் .கோகிலவாணி

512 0

kokilavaniகடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக தனது தலைவிதியினைத் தானே நிர்ணயித்துக்கொள்வதற்காக தமிழ்பேசும்மக்கள், பலவழிகளிலும் மேற்கொண்டுவந்திருந்த உரிமைப்போராட்டம் ஒரு நிறைவுறாத தொடர்ச்சியாக இன்றுவரை நீண்டு செல்கின்றது. எத்தனையோ அவலங்கள் தியாகங்களைக் கடந்து வந்த நிலையில் இன்று தமக்கான உரிமையினை கோருவதற்கான அனைத்து வழிகளும் மிகவும் நுணுக்கமாக அடைக்கப்பட்ட ஒரு முட்டுச்சந்தியில் தமிழினம் நிறுத்தப்பட்டிருகின்றது.

வன்னியின் இறுதியுத்தத்தின் போது வெளித்தொடர்புகள், போக்குவரத்து வழிகள் உட்பட்ட அனைத்து வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் மந்தைகள் போல மக்களை அடைத்துவைத்து ஆறுமாதங்களுக்கு மேலாகத் தனது கொலைத்தொழிலை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வந்திருந்தமைக்கான ஆதாரமாக அந்தக்கொடூரங்களை எதிர்கொண்ட மக்கள் இன்னும் இருக்கின்றார்கள்.

அதை வெளிப்படுத்தும் ஆவணங்கள் இருக்கின்றன. தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பிரயோகித்து இலங்கை அரசாங்கம் யுத்தம்புரிந்துள்ளது என்பதற்கான ஆதாரமாக உடலியல் பாதிப்புகளுக்குள்ளான மக்கள் இன்றுவரை உலாவருகின்றார்கள். மொத்தத்தில் இறுதியுத்தத்தில் மிகக்கொடூரமான வகையில் போர்க்குற்றங்களையும் மனித உரிமைமீறல்களையும் இலங்கை அரசாங்கமும் இராணுவமும் இழைத்திருக்கின்றன என்பதற்கு இதைவிடசான்றுகள் இருக்கமுடியாது.

ஆனால் இங்கே பாதிக்கப்பட்டிருப்பது இலங்கையில் சிறுபான்மைத் தேசியஇனமான தமிழ்மக்கள். அந்தப்பாதிப்பை ஏற்படுத்தியது பெரும்பான்மை இனசிங்கள அரசாங்கமும் அதன்படைகளும். பெரும்பான்மைசிங்கள பௌத்தமக்கள் மீது தனது வாக்குவங்கிக்காகத் தங்கியிருக்கும் ஆளும்சிங்கள அரசதரப்பு, அந்தமக்களின் ஒரு பகுதியான சிங்கள முப்படைகள்மீது விசாரணை நடாத்தி அவர்கள் போர்க்குற்றம்  இழைத்துள்ளார்கள்  என ஒரு போதும்  நிறுவ முயலாது.

இந்த நிலையில் இலங்கையில் இராணுவத்திற்கெதிரான போர்க்குற்ற விசாரணையென்பது அது உள்ளக விசாரணையாகட்டும் அல்லது சர்வதேசவிசாரணையாகட்டும் எந்தக்காலத்திலும் நடைபெறப்போவதில்லை.

அப்படி நடாத்தப்பட்டால் கூட தற்போது ஈராக்கில் பிரித்தானியப்படைகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பில் சில அடிமட்ட இராணுவத்தினர் மீது குற்றங்களைச்சாட்டியது போன்றே இங்கும் கீழ்நிலையில் உள்ள ஒருசில இராணுவத்தினர்மீது குற்றங்களைச் சாட்டி அவர்களைத் தண்டிப்பது போன்ற ஒருபாவனையைக் காட்டுவதன் மூலம் சர்வதேசத்தையும் தனது சிங்கள பௌத்த மக்களையும் திருப்திப்படுத்தி தம்மை ஒரு நீதிவான்களாக, நடுநிலைத்தன்மை கொண்டவர்களாக காட்டுவதற்காகவே அந்தவிசாரணை அமையுமேயன்றி அரசபயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிப்படைந்த மக்களுக்கான தீர்வு வழங்குவதற்காகவோ அல்லது பொறுப்புக்கூறலுக்காகவோ அமையாது.

இப்போர்க்குற்ற விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் எதுவித முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லைஎன்பது வெளிப்படையாகவே உணர்ந்து கொள்ளப்பட்ட நிலையில் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து ஒருவருடத்திற்கு இருதடவைகள் ஜெனீவாவில் மனிதஉரிமைகள் ஆணைக்குழு முன் ஒன்றுகூடுவதால் எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை.

எமது நிலங்கள் இராணுவக்குடியிருப்புக்களாகவே தொடர்கின்றன.என்றும் எதுவும் நடைபெறலாம் என்ற அச்சம் கலந்த மயான அமைதி வடக்குக்கிழக்கின் நாளாந்த வாழ்க்கையாகிவிட்டது. நல்லிணக்கம், நல்லாட்சி என்ற தலைப்பில் நடத்தப்படுகின்ற சிறுபான்மை தேசிய இனங்களைச் சிதைக்கும் நடவடிக்கையின் பின்னணியில் குண்டு வீச்சுக்களும் போர்விமானங்களின் இரைச்சலும் மட்டுமே நிறுத்தப்பட்டிருக்கிறது.

வடகிழக்கின் இன்றைய சூழலை மேலோட்டமாக அலசினால் இராணுவ ஒடுக்குமுறை தற்காலிகமாகத் தணிந்திருப்பது போன்ற போலியான தோற்றப்பாட்டைத் தந்துவிடும்.உண்மை அதுவல்ல என்பது அங்கு நாளாந்தம் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழர்களுக்கும் தெரிந்திருக்கிறது.
சிலகாலங்கள்வரைக்கும் உலகத்தின் அதிகாரபலம்மிக்க நாடுகளால் இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படும் என்ற நம்பிக்கை இன்று படிப்படியாகத் தகர்ந்து செல்ல ஆரம்பித்திருக்கிறது. இவ்வாறான சூழலில் வடக்குக்கிழக்கின் சந்துபொந்துக்களிலெல்லாம் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவம் குடிகொண்டிருக்கிறது .மக்கள் குடியிருப்புக்கள் மத்தியில் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிக்கின்றன.
உலக நாணயநிதியத்தின் முகாமைத்துவ இயக்குனராகப் பதவிவகித்த டொமினிக்ஸ்ரொஸ்கான், நியூயோர்க் நகரில் வைத்து பாலியல் குற்றம் ஒன்று தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு தனிமைச்சிறையில் வைக்கப்படுகிறார்.

அவர் தனிமைப்படுத்தப்பட்டபோது அமெரிக்க பாதுகாப்புத் துறை கூறிய பிரதானகாரணம், அவரின் நடமாட்டத்தால் சமூகத்தில் ஏனையவர்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்பதே.பாலியல்குற்றத்தில் ஈடுபட்டதாகக்கருதப்பட்ட ஒருதனிமனிதனுக்கே இவ்வளவு கரிசனை என்றால் சாரிசாரியாகப் பாலியல்வல்லுறவிலும், போர்க்குற்றங்களிலும், மனிதப் படுகொலைகளிலும், இனவழிப்பிலும் ஈடுபட்ட இராணுவம் எப்படி மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் சுதந்திரமாக உலாவரலாம் என்ற கேள்வியை அரசைநோக்கி முன்வைப்பதற்கும் உலகமக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதற்கும் இன்றுயாருமில்லை.
இந்தநிலையில் இலங்கை இராணுவத்தின் தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வு என்ற பெயரில் தடுத்துவைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள்போராளிகளது இனங்காணமுடியாத மரணங்கள் என்ற செய்தி கடந்த இருவாரங்களாக தமிழ்ஊடகங்களைப் பொறுத்தவரையில் முக்கிய இடத்தைப்பிடித்திருந்தது.

2009களின் நடுப்பகுதியில் வன்னிப்பகுதியில் மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் தனது முப்படைகளையும் கொண்டு தமிழ்மக்கள்மீது கொடூரமான இனஅழிப்பினை மேற்கொண்டிருந்த இலங்கை அரசாங்கம் எவ்வாறு தான்இழைத்த போர்க்குற்றங்களையும் மனிதஉரிமைமீறல்களையும் வெகுசாதாரணமாகக் கடந்து போக நினைக்கின்றதோ அதேபோன்றே இங்கு குறிப்பிடப்படும் முன்னைநாள் விடுதலைப்புலிகள் அங்கத்தவர்களது விடயத்தையும் வெகு எளிதாகக் கடந்து சென்றுவிடும் என்பது ஒரு வெளிப்படை உண்மை.

சமீபகாலங்களாக ஊடகங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னைநாள் போராளிகளில் 103 பேர் இனம் தெரியாத நோய்களினால் மரணித்தனர் என்ற செய்தி பரப்பரப்பாகப் பேசப்பட்டுவருகின்றது.தடுப்புமுகாம்களில் மிகக்குறைந்த இடப்பரப்பில்,சுகாதாரவசதிகளற்ற நிலையில் பெருமெடுப்பிலான போராளிகள் அடைத்துவைக்கப்பட்டனர். சாதாரணமாக நால்வர் தங்கக்கூடிய அறைகளில் இருபதிற்கும் மேற்பட்டோர் திணிக்கப்பட்டனர்.ஆயிரம்வரையிலானோர் குளிப்பதற்கு அரைமணிநேரமே ஒதுக்கப்பட்டது. மலசலகூடங்களிற்கு நீர்வசதிகள் காணப்படவில்லை. ஏற்கனவே போர்முனைகளில் போராயுதங்களின் வீரியங்களினால் மோசமாகப்பாதிக்கப்பட்டிருந்த இப்போராளிகளுக்கு யுத்தத்தின் பின்னரான தடுப்புமுகாம் வாழ்க்கை என்பது மிகமோசமானகாலத்தை உணர்த்தியிருந்தது.

இந்தநிலையில் தடுப்பு முகாம்களுக்குள் இருந்த வேளைகளிலேயே சிலமரணங்கள் ஆண்பெண் போராளிகள் மத்தியில் இடம்பெற்றிருந்தமையை யாராலும் மறுக்கமுடியாது.வைத்தியசாலைகளிலேயே அவைநிகழ்ந்திருந்தன.அந்தமரணங்களுக்கான காரணம் அறியப்படவில்லை.அதனைஉள்ளிருந்து கேட்பதற்கான மனவலுவும் போராளிகளுக்கு அப்போது இருந்திருக்கவில்லை.

எங்களது தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் அடுத்ததேர்தலுக்கு தமிழ்மக்களது வாக்குகளைக் கவர்வதற்கு இந்த விடயம் பெரிதும் உதவியாக இருக்கப்போகின்றது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து தாம் சார்ந்த சமூகத்தின் விடுதலைக்காகப் போராடிய போராளிகள் புனர்வாழ்வு என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டபின்னரே சமூகத்தில் இணைந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
நல்லிணக்கம் தொடர்பாகவும் யாப்புமாற்றம் தொடர்பாகவும் பேசுகின்ற எந்த அரசியல்வாதியும் முன்னைநாள் போராளிகளது நிலவரம்பற்றிப் பேசுவதில்லை. நல்லிணக்கத்திற்குச்  செல்வதற்கு முன்னால், கைது செய்யப்பட்ட போராளிகளின் இன்றைய நிலை தொடர்பான இலங்கை அரசிடமிருந்து குறைந்தபட்ச விபரங்களையாவது பெற்றுக்கொள்ள இவர்கள் முன்வந்ததில்லை.

நூற்றுக்கணக்கான போராளிகள் வாழும் சாட்சிகளின் முன்னால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் இன்றையை இருப்புத் தொடர்பான தகவல்களைக்கூடப் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் இன்று தமிழர்களின் நலன் குறித்துப்பேசுகிறார்கள். இவர்கள் அனைவருமே  போராளிகளை முன்வைத்து அரசியல் சுயலாபம் தேடிவதற்கு மட்டும் தவறியதில்லை.

இந்தநிலையில் தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டிருந்த போராளிகளில் 103 பேர்   மர்மமாக இறந்து போயினர் என சிலஊடகங்களும் அரசியல்வாதிகளும் மக்களை உணர்ச்சிவசப்படுத்துவதன் காரணம் மர்மமானது.
இந்த 103 மரணங்களுக்கான எந்தவிதமான ஆதாரத்தையும் இவர்கள் இதுவரை முன் வைத்ததில்லை . இக்குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் தமக்குத்தெரிந்த ஆதாரங்கள் இருந்தால் குறைந்த பட்ச விபரங்களோடு அவற்றை வெளிப்படுத்த வேண்டும்.உணர்சிவசப்படுத்துவதற்கான வதந்திகள் போன்று அல்லாமல், ஆதார பூர்வமாக இதுகுறித்த விடயங்களை முன்வைப்பது மிகமிக அவசியமாகும்.
தமது அரசியல் சுயலாபத்திற்காக போராளிகளைப் பகடைக்காயாக்கும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இன்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது என நிறுவப்பட்டால்,ஆதாரபூர்வமாக இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைமீறல்கள் அனைத்தும் புனைகதைகள் என இலங்கைப் பேரினவாதிகள் வாதிடுவதற்கான வாய்ப்பை வழங்கிவிடும்.

வன்னியில் திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தப்படிருக்கிறது.அதன் வடுக்கள் எமக்கான உரிமைகிடைத்தால் மட்டுமே ஆறும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கமுடியாது. இத்தனை குற்றங்களுக்கும் பொறுப்பான இராணுவம், நீண்டகால நோய்களை ஏற்படுத்தவல்ல நோய்களை உருவாக்கும் நச்சுக்களைப் போராளிகள்மீது செலுத்தியிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழ இடமுண்டு. இரசாயனக் குண்டுகளையும் கொத்துக்குண்டுகளையும் மக்கள்மீது ஏவிய இராணுவத்திற்கு இவைஒன்றும் தலைபோகிறவிடையமல்ல.

இக் குற்றச்சாட்டைப் பொறுப்புணர்வுடன் முன்வைப்பவர்களாக இருப்பின் சில தகவமைக்கப்பட்ட முழுமையான ஆதாரங்களை முன்வைக்கட்டும். அவ்வாறான ஆதாரங்கள் இருந்தால் போராளிகள் அனைவர்மீதான பொருத்தமான மருத்துவப்பரிசோதனை ஒன்றைக் கோரி மக்களைஅணிதிரட்டிப் போராடவேண்டும். இந்தகொடூரத்திற்கு எதிராக உலகின் மனிதாபிமானிகளையும் ஜனநாயகவாதிகளையும் ஒன்றிணைய அழைக்கவேண்டும். இதன்பின்னர் உடனடி மருத்துவ நிவாரணமும் விசாரணைக்கான பொறிமுறையும் முன்மொழியப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் தவிர்த்து வடகிழக்கிலும் புலம்பெயர் நாடுகளில்வாழும் தமிழர்களின் காதுகளுக்குமட்டும் எட்டுமாறு பொறுப்பற்றவகையில் செயற்படுவது சமூகப்பற்றுள்ளவர்களின் நடவடிக்கையன்று. இவை அரசியல் சுயலாபத்திற்கு மட்டுமே பயன்படும். இத்தகைய உருவேற்றும் உணர்ச்சி அரசியல் எம்மத்தியிலிருந்து இல்லாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும், அவலத்தை எதிர்நோக்கும் மக்களுக்கும், துயரின்விளிம்புகளில் வாழும் போராளிகளுக்கும் எந்த விதத்திலும் உதவப்போ வதில்லை. மாறாக சுயநிர்ணைய உரிமைக்கான எமதுபோராட்டத்தின் நியாயத்தன்மையினை கேள்விக்குரியதாக்கும் ஒன்றாகவே அமையும்.

நன்றி- தினக்குரல்(07-08-2016)

.