காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் குண்டுவீச்சு: ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்

580 0

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபடுகிறது. சில தினங்களுக்கு முன்பு இந்தியாவுக்குள் ஊடுருவி வந்த பாகிஸ்தான் வீரர்கள், 2 இந்திய ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்று, அவர்களது தலையைத் துண்டித்து வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் பாகிஸ்தான் வீரர்கள், காஷ்மீரில் ரஜோரி செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியில் திடீரென அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். சிறிய ரக பீரங்கிகளால், இந்திய எல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து தடுத்து நிறுத்தியது. அதோடு ரஜோரி செக்டாருக்கு கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் அந்த பகுதியில் சிறிது அமைதி நிலவியது.

இந்த நிலையில் இன்று காலை ரஜோரி பகுதியில் இருக்கும் நவ்ஷேரா மற்றும் மஞ்சோக் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீர் தாக்குதல்களை நடத்தினர். அந்த எல்லையோரப் பகுதி மக்கள் மீது பீரங்கித் தாக்குதல்களை நடத்தினார்கள். மேலும், எந்திரத் துப்பாக்கிகளால் கண்மூடித் தனமாக சுட்டனர்.

இதனால், அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அப்பகுதியில் இயங்கி வரும் பள்ளிகள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் 268 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.