ஏரி, குளங்களில் மண் எடுக்க கூடுதல் சலுகைகள்: தமிழக அரசு

218 0

விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் ஏரி, குளங்களில் மண் எடுக்க கூடுதல் சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சியின் காரணத்தினால் ஏரி மற்றும் நீர்நிலைகள் போதிய நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இச்சூழ்நிலையை பயன்படுத்தி அரசு மாநிலத்திலுள்ள பாசன வசதி பெறும் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள முடிவு எடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் 1959ம் வருடத்திய தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் விதி 12-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது செய்யப்பட்டுள்ள சட்டத்திருத்தங்களுக்குப் பிறகு கீழ்காணும் கூடுதல் சலுகைகள் விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

1. ஏற்கனவே விதி 6ல் கூறப்பட்டுள்ள 800 மாட்டு வண்டி அளவிற்கான (80 கனமீட்டர் அளவு) களிமண் மற்றும் மண் எடுக்கும் உரிமைகளைத் தவிர, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சிதுறை மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் இதர நீர்நிலைகளிலிருந்தும் சீனியரேஜ் தொகை செலுத்தாமல் 60 கனமீட்டருக்கு மிகாமல் எடுத்துச்செல்ல மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு விதி 12(தீ)-ன் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2. பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளில் தூர்வாரும்போது எடுக்கப்படும் மண் மற்றும் வண்டல் மண் விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்படும் என்பதாலும், விவசாயிகள் அதனை உபயோகப்படுத்தி அவர்களின் நிலங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் விவசாய பணிகளுக்கு சீனியரேஜ் தொகை இல்லாமல் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களுக்கு ஏற்றவாறும், நிலத்தின் விஸ்தீர்னத்திற்கு ஏற்றவாறும், தேவைப்படும் மண்ணை எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டருக்கு (25 டிராக்டர் லோடுகள்) மிகாமலும், புஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் (30 டிராக்டர் லோடுகள்) மிகாமலும், நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண் எடுத்துச்செல்ல விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்கூறிய விதிகள் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர்த்து அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்.

எந்தெந்த நீர் நிலைகளில் இருந்து மண் எடுக்கலாம் என்ற விபரம் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களால் மாவட்ட அரசிதழில் வெளியிடப்படும்.இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகள் பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளால் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.