தமிழ்நாட்டில் முன்னணி திட்டங்கள் முடங்கி கிடக்கின்றன: அன்புமணி ராமதாஸ்

226 0

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டிய முன்னணித் திட்டங்கள் எந்த முன்னேற்றமுமின்றி முடங்கி கிடப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதலமைச்சராக தாம் பதவியேற்ற பின்னர் அரசு நிர்வாகம் விரைவாக செயல்படத் தொடங்கி இருப்பதாகவும், 70 நாட்களில் 1560 கோப்புகளில் கையெழுத்திட்டிருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். ஆனால், தமிழகத்தின் வளர்ச்சிக்கான முன்னணித் திட்டங்கள் 5 முதல் 10 ஆண்டுகளாக முடங்கிக்கிடப்பது முதல்வருக்கே தெரியாத அளவுக்கு அரசு உறக்கத்தில் உள்ளது.

தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றப்போவதாக வாக்குறுதி அளித்து 2011-ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்த முதலமைச்சர் ஜெயலலிதா வி‌ஷன் 2023 என்ற பெயரில் தொலை நோக்குத் திட்டத்தை 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தார். 5 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்பட வேண்டிய 10 முன்னணித் திட்டங்கள் எந்த முன்னேற்றமுமின்றி முடங்கிக்கிடப்பதை டெக்கான் கிரானிக்கிள் நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான ரூ.40,000 கோடி மதிப்புள்ள மதுரை தூத்துக்குடி தொழில் தாழ்வாரம், ரூ.10,000 கோடி மதிப்பிலான சென்னை நீர்நிலைகளை மேம்படுத்தும் திட்டம், ரூ.1500 கோடி மதிப்பில் சென்னையில் திடக்கழிவு கையாளும் நிலையம் அமைக்கும் திட்டம்.

திருப்பெரும்புதூரில் ஒருங்கிணைந்த நிதி நகரம் அமைப்பதற்கான ரூ.1500 கோடித் திட்டம், கடலூரில் ரூ.2000 கோடி மதிப்பிலான துறைமுக மேம்பாட்டுத் திட்டம், திருப்பெரும்புதூரில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம்.

ரூ.3000 கோடி மதிப்பில் சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், தரிசு நிலங்களில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலையை மேம்படுத்தும் திட்டம் என மொத்தம் 8 திட்டங்கள் இன்னும் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமின்றி, 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சென்னை மாநகருக்கான இரண்டாவது மாஸ்டர் பிளான் திட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகும் செயல்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. செயல்படுத்தவில்லை

2011ஆம் ஆண்டில் அ.தி.மு.க அரசு பதவியேற்ற பிறகு இன்று வரை சொல்லிக் கொள்ளும்படியாக எந்த திட்டத்தையும் செயல் படுத்தவில்லை. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகத்திற்காக கட்டப்பட்ட கட்டிடத்தை அவசர அவசரமாக மாற்றி பன்னோக்கு அதி உயர்சிறப்பு மருத்துவமனையாக மாற்றிய அ.தி.மு.க அரசு, அதை பராமரிப்பதில் எந்த அக்கறையும் காட்டவில்லை.இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வி‌ஷன் 2023 திட்டத்திற்காக 11 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட வேண்டும். ஆனால், இன்று வரை ரூ.5000 கோடி கூட இத்திட்டத்திற்காக தமிழக அரசு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே, தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல் வி‌ஷன் 2023 திட்டம் உள்ளிட்ட வளர்ச்சிக்குத் தேவையானத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.