கிர்கிஸ்தான்: கடும் நிலச்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 24 பேர் பலி

228 0

கிர்கிஸ்தான் நாட்டில் நேற்றிரவு ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானின் தெற்கு பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் உஸ்ஜென் மாவட்டத்தில் உள்ள ஓஷ் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள் மண்ணில் புதையுண்டன. இதையடுத்து சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிர்கிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தரப்பில், “கிர்கிஸ்தானின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 குழந்தைகள் உட்பட 24 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

காணமல் போனவர்களை தேடும் பணியை மீட்புப் படையினர் முடுக்கிவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இப்பகுதியில் நிலச்சரி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.