அஸ்லான் ஷா ஆக்கி: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் ‘டிரா’

256 0

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

மலேசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ள அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. பலத்த மழை காரணமாக 2 மணி நேரம் தாமதமாக தொடங்கிய விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்திய அணியில் ஆகாஷ்தீப்சிங் 19-வது நிமிடத்திலும், மன்தீப்சிங் 48-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் கார்சன் 25-வது நிமிடத்திலும், ஆலன் போர்சித் 52-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார்கள்.

5 முறை சாம்பியனான இந்திய அணி, கடந்த ஆண்டு லண்டனில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.