கர்ப்பிணி கொலை: மரண தண்டனை கைதியை ஆஜர்ப்படுத்த உத்தரவு

235 0

ஊர்காவற்துறை கர்ப்பிணி கொலை தொடர்பில், நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கு குற்றவாளிக்குத் தகவல்கள் தெரியுமா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி, ஊர்காவற்துறையில், ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாதக் கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் பெண் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில், சகோதரர்களான இரு நபர்கள், மண்டைதீவு சந்தியில் வைத்து அன்றைய தினம் மாலை, ஊர்காவற்துறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். குறித்த படுகொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. அது தொடர்பிலான வழக்கு விசாரணை, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் நேற்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதற்கு முன்னதான கடந்த வழக்கு விசாரணையின்போது, சந்தேகநபர்கள் இருவரும் தம்மை வழக்கு விசாரணையின் போது காட்டிக் கொடுக்காது விட்டால், கண்கண்ட சாட்சியமான சிறுவனின் குடும்பத்துக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பணம் தருவதாக, சிறுவனின் உறவினர் முறையான சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகிந்தன் என்பவருடன் பேரம் பேசியதாக, சிறுவனின் தாயாரால் நீதவானின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.

அது தொடர்பில் விசாரணை நடத்த அன்றைய தினம் நீதவான் உத்தரவிட்டிருந்தார். விசாரணை தொடர்பில், சந்தேகநபர்கள் இருவரும் தன்னுடன் பேரம் பேசவில்லை எனவும், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெகன் என்பவரே குறித்த படுகொலை தொடர்பில் தனக்குத் தகவல்கள் தெரியும் எனவும், அதனைத் தான் நீதிமன்றில் கூறுவதற்குத் தனக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பணம் தருமாறும் சந்தேகநபர்களிடம் பேரம் பேசியதாக தெரிவித்துள்ளார் என, பொலிஸார் நேற்று (28) நீதிமன்றில் தெரிவித்தனர். அத்துடன், ஜெகன் என்பவர் நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, யாழ். மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரென தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, குறித்த ஜெகன் எனும் நபரை எதிர்வரும் 12ஆம் திகதி மன்றில் முற்படுத்துமாறு பதில் நீதவான் உத்தரவிட்டதுடன், வழக்கினையும் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போது, குறித்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நபரொருவர், தனக்கு ஊர்காவற்துறை கர்ப்பிணி படுகொலை தொடர்பில் சில தகவல்கள் தெரியும் எனவும், அதனை தான் ஊர்காவற்துறை நீதிமன்றில் தெரிவிக்க தயார் எனவும் மன்றில் தெரிவித்திருந்தார். அதனையடுத்து அது தொடர்பில் குறித்த நபர், ஊர்காவற்துறை நீதிமன்றில் சாட்சியமளிக்க ஏற்பாடு செய்யுமாறு, நீதிபதி உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. –