மன்னாரில் கடற்படையினருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று சந்திப்பு

211 0
மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் வாழ்விடங்களில் உள்ள கடற்படை முகாமை பின் நகர்த்தி அப்பகுதியில் மக்களின் வாழ்விடத்திற்கு அனுமதிப்பது தொடர்பில் இன்றைய தினம் கடற்படைமுகாமில் சகல தரப்பு பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய வகையில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
மன்னார் முள்ளிக்குளத்தில் தமிழ் மக்களின் வாழ்விடம் மற்றும் வாழ்வாதார இடங்கள் மத வழிபாட்டு இடங்கள் உள்ளடங்களாக 300 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கிய வகையில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் கடற்படையினர் முகாமிட்டுள்ளனர். இவ்வாறு முகாமிட்டுள்ள கடற்படையினர் தமக்கான பாரிய கட்டிடத்தினை அமைத்துள்ளதோடு தமிழ் மக்களிற்குச் சொந்தமான 27 வீடுகளை ஆக்கிரமித்து அவற்றில் கடற்படையினர் தமது குடும்பங்களைத் தங்க வைத்துள்ளனர்.
இவ்வாறு தமது வாழ்விடங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் தமது முகாமிற்கு மேலதிகமாக தமது குடும்பங்களோடு தங்க வைப்பதற்காக தக்கவைத்துள்ள தமது 300 ஏக்கரினையும் விடுவித்து ஏனைய 300 ஏக்கருடன் அண்டியுள்ள காட்டுப்பகுதியை உள்ளடக்கியவாறு கடற்படைத் தளத்தினை மாற்றிக்கொள்ளுமாறுகோரியே மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் பிரகாரம் குறித்த பகுதி விடுவிப்புத் தொடர்பில் இன்றைய தினம் குறித்த கடற்படை முகாமில் கடற்படைத் தளபதி , மாவட்டச் செயலக அதிகாரிகள் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மாவட்ட ஆயர் அலுவலகப் பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவினர் ஒன்றுகூடி இவ் நில விடுவிப்புத் தொடர்பில் ஆராயவுள்ளனர்.
இதன் பிரகாரம் குறித்த சந்திப்பின் பின்னர் அப்பகுதியில் உள்ள மக்களின் பூர்வீக வாழ்விடத்தினையும் குறித்த தரப்பினர் நேரில் பார்வையிட்டு ஓர் இறுதி தீர்விற்கு வருவது தொடர்பில் தீர்மானம் ஒன்றினை எட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது