வங்காளதேசத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் பலி

208 0

வங்காளதேசத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படை போலீசார் தாக்கியதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

வங்காளதேசத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பல்வேறு பாதுகாப்பு படைகளும் தீவிரமாக நடத்தி வருகின்றன.

இந்தநிலையில் சபாய்நவாப் கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அதிரடிப்படை போலீசாருக்கு நேற்றுமுன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இரவில் அங்கு அதிரடிப்படை போலீசார் சென்று, அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அவர்களை சரண் அடையுமாறு கூறினர். ஆனால் அவர்கள் செவி சாய்க்கவில்லை.

மாறாக போலீஸ் படையை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் திருப்பி சுட்டனர். விடிய விடிய இந்த சண்டை நடந்தது.

ஒரு கட்டத்தில் எதிர்தரப்பில் இருந்து எந்த சலனமும் இல்லை. இதையடுத்து நேற்று மதியம் போலீசார் அந்த வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது, 4 பயங்கரவாதிகள் தங்கள் உடலில் கட்டி வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

பலியானவர்களில் ஒருவர் தடை செய்யப்பட்ட நியோ ஜே.எம்.பி. இயக்கத்தின் ரபிகுல் இஸ்லாம் என்ற அபு என தெரிய வந்தது. மற்ற 3 பேரின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து விட்டது.

மேலும் அங்கு காயம் அடைந்த நிலையில் ஒரு கர்ப்பிணி பெண்ணும், அவரது 6 வயது மகளும் மீட்கப்பட்டனர். அந்தப் பெண்ணின் காலில் குண்டு பாய்ந்திருந்தது தெரியவந்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண், பலியான ரபிகுல் இஸ்லாம் என்ற அபுவின் மனைவி என தகவல்கள் கூறுகின்றன.