தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றவர்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்

250 0

தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ்செயற்பட வேண்டுமென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஊடகவியலாளர் தராகியின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக இருக்கின்றதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இனிவரும் தேர்தல்களின் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிடும். தமிழர்களின் ஒற்றுமைக்காக செயற்பட வேண்டுமென்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஊடகவியலாளர் தராகி ஆகியோரின் விருப்பம்.

இருந்தாலும், அவற்றினை நிர்ணயித்தவர்கள் ஜி.ஜி.பொன்னம்பலம் மற்றும் தந்தை செல்வா போன்ற மூதாதைய தலைவர்களாகும்.

தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்வரும் தேர்தலில் தனது சின்னத்தில் போட்டியிடும்.

இந்த கட்சியில் அனைவரும் கட்சி வேறுபாடின்றி செயற்பட முடியும். நாம் எந்த கட்சியையும் வெறுக்கமாட்டோம். தமிழர்களின் ஒன்றுமைக்காக இணைந்து செயற்படுவோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றவர்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். மக்கள் இன்றும் வீதிகளில் இருந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் நிலமீட்பு போராட்டங்கள், அரசியல் கைதிகள் விடுதலை போன்றவற்றில் எத்தகைய அக்கறையும் காட்டாது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இணைந்து செயற்படுகிறது.

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.அவ்வாறு தீர்க்க முடியாவிட்டால், என்னிடம் வந்தால், அதற்காக வழிமுறைகளை சொல்லித்தர முடியும். யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்திற்கு இங்கு வேலையில்லை.

இராணுவ முகாம்களை மூடி விட்டு செல்ல முடியும். இங்கே இராணுவம் தேவை தான் என்றால் ஆரம்பத்தில் இருந்த ஓரிரு முகாம்களில் இராணுவம் இருக்க முடியும். ஏனையவற்றினை மூடலாம்.இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது சிறையில் இருந்த பாரிய குற்றங்கள் புரிந்துள்ளவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

அவ்வாறான ஒரு நிலை இருந்தும், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் எதற்காக அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாதவர்கள் பதவி விலக வேண்டுமென ஆனந்த சங்கரி இதன்போது வலியுறுத்தினார்.