தமிழர் வரலாற்று அடையாளமான கீழடியை மீட்க மதுரையில் ஒன்று கூடுவோம்

339 0

ஒரு சமூகத்தின் வரலாறு என்பது பன்முகத்தன்மை கொண்டது.அது உணர்வெழுச்சியின் அடிப்படையில் எழுதப்படுவது அல்ல உண்மையான தரவுகளின் அடிப்படையில் எழுத்தப்படுவது.தமிழர்களின் வரலாறு நீண்ட நெடிய பண்பாட்டுக்கு சொந்தமானது.

தமிழர்களின் தொழில் நுட்பத்தையும்,வணிகத்தின் வளர்ச்சியையும்,எழுத்தறிவையும் நாம் தொல்லியல் ஆதாரம் கொண்டும்,கல்வெட்டு ஆதாரம் கொண்டும்,ஓலை சுவடிகள் ஆதாரம் கொண்டும் எழுதி வருகிறோம். அது சிந்துசமவெளியின் தொடர்ச்சியாக இருப்பது தெள்ளத்தெளிவானது. தமிழர்களின் வரலாற்று ஆய்வின் தொடர்ச்சியாக கீழடி தொல்லியல் ஆய்வு அமைந்திருப்பதும் அங்கிருந்து கிடைக்கிற புதிய தரவுகள் தமிழுக்கு செழுமை தரக்கூடியதாகவும் இருக்கிறது.

கீழடி அகழாய்வினை இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் அகழாய்வுப் பிரிவு முன்னெடுத்து, அப் பிரிவினைச் சார்ந்த கி அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்காணிப்பு தொல்பொருளியலாளராகத் தலைமை ஏற்று மிக சிறப்பாக நடத்தி கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்த குறிப்பாக சங்ககால மக்கள் வாழ்ந்த, வசிப்பிடமாக இக்களம் கணிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 48 சதுரக் குழிகள் வெட்டப்பட்டு உறைகிணறுகள், செங்கற் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், மிளிர்கல், சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் அணிகலன்கள், யானைத் தந்தத்தினாலான தாயக்கட்டைகள், தாமிரத்தாலான கண் மை தீட்டும் கம்பி, இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரை கட்டைகள், சுடுமண் பொம்மைகள் எலும்புக் கருவிகள், இரும்பு வேல், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் எனப் பல்வேறு தொல்லெச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில் திடீரென தொல்லியல் ஆய்வாளர் கி அமர்நாத் ராமகிருஷ்ணன் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றப்படுகிறார்,அவருக்கு பதிலாக ஸ்ரீராம் என்கிற ஒருவர் கீழடி ஆய்வுக்கு பணியமர்த்தப்படுகிறார்.
ஸ்ரீராம் என்பவருக்கு இந்த ஆய்வு பற்றி எதுவும் தெரியாது,மற்றும் இவர் இது போன்ற தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டது கிடையாது,கடந்த இருபது வருடமாக அவர் அருங்காட்சியகத்தில் வேலையில் இருந்தவர்.இவர் எப்படி வரலாற்று பூர்வமான இந்த ஆய்வை முன் எடுக்க போகிறார்.

என்ன காரணத்திற்கு சிறப்பாக பணியாற்றி கொண்டிருந்த அமர்நாத்தை மாற்றி இருக்கிறது மத்திய அரசு? இந்த இடத்தை கண்டுபிடித்து,இதை பற்றிய விவரணங்களை தொகுத்து,இந்த கள ஆய்வை மிக நுட்பமாக நடத்திகொண்டிருக்கும் ஒரு ஆய்வாளரை நினைத்த நேரத்தில் மத்திய அரசு மாற்றுகிறது என்றால் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று அறிய முடிகிறது.

இதுவரை இங்கு வராத, அல்லது இங்கு வரவேண்டிய அவசியம் இல்லாத மத்திய மந்திரி ஏன் திடீரென இங்கு வரவேண்டும்?

மத்திய மந்திரி வருகையின் போது தொல்லியல் ஆய்வாளர் கி அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியில் இருக்க கூடாது என்றும் அவரை உடனடியாக அஸ்ஸாமுக்கு ரிலீவ் பண்ணிவிடுங்கள் என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது மத்திய அரசு.

இரண்டு நாள்களுக்கு முன்பு அமர்நாத்தை உடனடியாக கீழடி பணியிலிருந்து ரிலீவ் பண்ணிவிட்டார்கள்.மத்திய மந்திரி சர்மா வரும்போது இப்போது பணியில் அமர்த்தப்பட்டிருக்கிற, கீழடி பற்றி எதுவும் தெரியாத ஸ்ரீராம் சங்ககாலத்தில் தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்றும் கீழடி பற்றியும் விளக்குவாரம்! இது தமிழர்களின் மீதான பண்பாட்டு படையெடுப்பின் தொடர்ச்சி என்பதை நாம் அறிவோமா?

பன்முக கலாச்சாரத்தை அழித்து ஒற்றை கலாச்சார தன்மையை கொண்டுவர முயலும் பாஜக அரசு எல்லா நிலையிலும் தொடர்ந்து வேலை செய்கிறது என்பதை நாம் புரிந்தால் மட்டுமே நம்மை நாம் காக்க முடியும்!

ஏப்ரல் 28 காலை 10 மணியளவில் மதுரை அண்ணா நிலையம், திருவள்ளுவர் சிலை அருகில் கீழடியை மீட்க ஒன்று கூடுவோம்.

தமிழர் மரபினை அழிக்க நினைக்கும் பாஜக-ஆர்.எஸ்.எஸ் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவினையும், மத்திய அரசினையும் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம். அனைவரும் வாருங்கள்.

நாள்: ஏப்ரல் 28, வெள்ளி, காலை 10 மணி
இடம் : திருவள்ளுவர் சிலை, அண்ணா சாலை, மதுரை.