வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால்; அனைத்து பொதுச் சேவைகளும் முடக்கம்

269 0

வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல பிரதேசங்களில் இன்று முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காணாமல் போனவர்களின் உறவினர்களின் கோரிக்கையினை ஏற்று இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன ஆதரவு தெரிவித்துள்ளன.

யாழ் மாவட்டத்தில், உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் தவிர்ந்த மற்றய கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் நகர பகுதி வெறிச்சோடிக் காணப்படுவதாக எமது செய்தியாளர் கூறினார்.

இதேபோல் பேருந்து சேவைகள் முழுமையாக நிறுத்தப் பட்டுள்ளதுடன் யாழ். மாவட்டத்தில் சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாகவும், பேருந்து சேவைகள் இல்லாமையினால் அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்களில் அலுவலர்கள் குறைவாகவே சென்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.

அத்துடன் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இன்றைய தினம் காலை நடைபெறவிருந்த வடமாகாண சபையின் 91வது அமர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை 10மணிக்கு கூடிய வடமாகாண சபை,

இதேவேளை மட்டக்களப்பு நகர் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள போதிலும் உத்தியோகத்தர்களின் வரவு குறைவாகவுள்ளதாலும், பொதுமக்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள செல்லாததன் காரணமாகவும் அரச நிர்வாகம் முடக்கப்பட்டதாக எமது  செய்தியாளர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களின் வரவின்மை காரணமாக ஆசிரியர்கள் மட்டுமே பாடசாலைகளில் இருப்பதாகவும், ஒரு சில தனியார் பஸ் போக்குவரத்துகள் நடைபெறுகின்ற போதிலும் உள்ளூர் போக்குவரத்துகள் முடங்கியுள்ளதுடன் இலங்கை போக்குவரத்துச்சேவை பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

அதேவேளை தனியார் வங்கிகள் இயங்குகின்ற போதிலும் அரச வங்கிகள் மூடப்பட்டுள்ளது.

இதுதவிர அம்பாறை மாவட்டத்தில் ரச அலுவலகங்கள், பாடசாலைகள், அரச, தனியார் வங்கிகள் நிறுவனங்கள் எவையும் இயங்கவில்லை என்று எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

கல்முனை, பாண்டிருப்பு, நீலாவணை, நற்பிட்டிமுனை, காரைதீவு, திருக்கோவில் போன்ற தமிழ் பகுதிகளில் சந்தைகள், வர்த்தக நிலையங்கள், கடைகள் எவையும் திறக்கப்படவில்லை.

எனினும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனை நகர பொதுச் சந்தை, சாய்ந்தமருது, சம்மாந்துறை மற்றும் கல்முனைக்குடி பொதுச் சந்தைகளில் வழமை போன்று வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இது குறித்து வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கேட்டபோது, தமக்கு இன்றைய ஹர்த்தால் தொடர்பில் எவ்வித முறையான அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுதவிர திருகோணமலை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த ஹர்த்தால் நடவடிக்கையால் அப்பிரதேச பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.