பொது அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் பொதுக் கூட்டத்தால் குழப்பம்(படங்கள்)

299 0
இன்று வடக்கு கிழக்கு முழுவதும் பூரண கதவடைப்பு போராட்டடம் இடம்பெற்றுள்ள நிலையில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்னறலிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் ஏ9 பிரதான வீதியை மறித்து கதறி  அழுது போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில்
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய நிர்வாகத்தினர் இன்றைய தினம் சில பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்  மற்றும் ஆலய பொதுச் சபை உறுப்பினர்களின் ஒரு பகுதியினரின் எதிர்ப்பையும் மீறி தங்களின் பொதுச்சபை கூட்டத்தை ஆலய அன்னாத மண்டபத்தில்  நடத்தியமை  காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மத்தியிலும், பொது அமைப்புக்கள் மத்தியிலும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டு எட்டு வருடங்களாக எவ்வித முடிவும் இன்றி ஏங்கித்தவிக்கும் உறவினர்கள்  தங்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு கோரி ஆலய முன்றலில் வீதியில் இறங்கி போராடி வரும் போது ஆலய நிர்வாகம் போராட்டம் நடத்தப்படுகின்ற இடத்திலேயே தங்களின் பொதுச் சபைக் கூட்டத்தை நடத்தியது அனைவரையும் விசனத்திற்குள்ளாக்கியுள்ளது.
இந்த பூரண  கதவடைப்பு போராட்டத்திற்கு கிளிநொச்சியில் வர்த்தக சமூகம், கல்விச் சமூகம், பொது அமைப்புகள்,  விவசாய அமைப்புகள்,  அரசியல் கட்சிகள் என பலரும் தங்களின் ஆதரவை வழங்கி வழமையான செயற்பாடுகளை  நிறுத்தி போராட்டத்திற்கு வலுச்சேர்த்துள்ள நிலையில் தங்களின் ஆலய முன்றலில் நடத்தப்படுகின்ற போராட்டத்தை கவனத்தில் எடுக்காது ஆலய நிர்வாகம் பொதுச் சபை கூட்டத்தை நடத்தியிருக்கிறது.
சில பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்  மற்றும் ஆலய பொதுச் சபை உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் குறித்த கூட்டத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்த போதும் அதனையும் ஏற்காத நிர்வாகம் கூட்டத்தை நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 25 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஆலயத்தின் வெளிப்புறமாக உள்ள சிறிய அறை ஒன்றை அரை மணத்தியாலயத்திற்கு கோரிய போதும் நிர்வாகம் வழங்க மறுத்தமையும் குறிப்பிடத்தக்கது.