நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு – கிருஷ்ணசாமி மனோகரன்

296 0

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பிரித்தானியாவில் தன்னையும் ஒரு தேசியச் செயற்பாட்டாளனாய் இணைத்துக்கொண்டு விடுதலைக்காய்த் தொடர்ந்து பயணித்த மனோ அண்ணை என்று பலராலும் அறியப்பட்ட கிருஷ்ணசாமி மனோகரன் அவர்களை 12.04.2017 அன்று நாம் இழந்துவிட்டோம்.

இயல்பாகவே எளிமையும், நேர்மையும், எல்லோரையும் மதித்துப்பழகும் பண்பும்கொண்டிருந்த இவர் பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைக்காக 29 ஆண்டுகளிற்கு மேல் உறுதியுடன் பயணித்தார்.

1970ஆம் ஆண்டுகாலப்பகுதியில் மேற்படிப்பிற்காக பிரித்தானியா வந்தபோதும் அவர், சிங்கள ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைகளை நன்கறிந்திருந்தார். 1983ஆம் ஆண்டு சிறிலங்கா அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக்கலவரம் அவரை தேசத்துக்கான பணியின்பால் தூண்டியது.
அக்காலப்பகுதியில் பல்வேறு சிக்கல்களிற்கும், பொறுப்புக்களிற்கும், கேள்விகளிற்கும் மத்தியிலேயே மனோ அண்ணை போன்ற செயற்பாட்டாளர்களின் விடுதலைக்கான பணிகள் அமைந்திருந்தன.

இவர் தாயக விடுதலையை நெஞ்சில் சுமந்து, தமிழீழ விடுதலைத் தாகத்தை இலட்சியமாக கொண்டு, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டலை ஏற்று தன் பணியினை தொடர்ந்தார். பிரித்தானியாவில் மிக நெருக்கடியான காலங்களிலெல்லாம்; பொறுப்புமிக்க பணியினை சுமந்து போராட்டத்தின் பெரும்பாய்ச்சலுக்கு வலுச்சேர்த்தவர்.

மாவீரர்களின் கனவினையும், தாயகமக்களின் நினைவுகளையும் தன்னுள்தாங்கி தொடர்ந்தும் ஈடுபாட்டோடு விடுதலைப்பணியாற்றிய இவரை அண்மையில் நாம் இழந்துவிட்டோம். அன்னாரின் இழப்பு தாயகவிடுதலைப்போராட்டத்திற்கும், விடுதலையை வேண்டிநிற்போருக்கும், அவரது குடும்பத்தினரிற்;கும் பேரிழப்பாகும்.
இத்தகைய விடுதலை வீச்சுகொண்ட பற்றுறுதிமிக்க செயற்பாட்டாளனை தமிழ்மக்கள் இழந்துநிற்கின்றனர். இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, பிள்ளைகளின் துயரில் நாமும் இணைந்துகொள்வதுடன் அமரர் கிருஷ்ணசாமி மனோகரன் அவர்களிற்கு நாட்டுப்பற்றாளர் என்னும் கௌரவம் வழங்கி மதிப்பளிக்கப்படுகின்றது.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.